அயோத்தி திரைப்படத்தில் கதாநாயகன் கதாபாத்திரம் செய்த மனித நேய உதவியை நிகழ்காலத்தில் செய்துவரும் நிஜ ஹீரோக்களை நடிகர் சசிகுமார் கௌரவித்தார்.
அயோத்தி திரைப்படத்தில் வடமாநிலத்தில் இருந்து தமிழகம் வந்த குடும்பம் ஒன்று விபத்துக்கு ஆளாகும். அதில் குடும்ப தலைவி இறக்க அவரது உடலை பல்வேறு போராட்டங்களை தாண்டி கதாநாயகன் சசிகுமார் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பார். அதோடு வட மாநிலத்திலிருந்து வந்து தமிழகத்தில் தத்தளிக்கும் அக்குடும்ப உறுப்பினர்களுக்கு ஆதரவாகவும் இருந்து மனித நேயத்தை வெளிப்படுத்தியிருப்பார். விமர்சன ரீதியாக இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், அயோத்தி திரைப்படத்தில் கதாநாயகன் செய்ததை துபாயில் நிகழ்காலத்தில் சில தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர். அவர்களை நடிகரும் இயக்குனருமான சசிகுமார் கௌரவித்துள்ளார்.
இந்த நிகழ்வு தொடர்பாக அவர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் சசிகுமார் கூறியுள்ளதாவது:
அயோத்தி படத்தில் நான் செய்த மனித நேய உதவியைப் போல் துபாயிலிருந்து இறந்தவர்கள் உடலை அவர்களது உறவினர்களிடம் அனுப்பும் சேவையை அங்கே நிறைய தன்னார்வலர்கள் செய்து வருகிறார்கள். அவர்களை கௌரவிக்கும் விதமாக துபாய் அமீரகத்தில் விழா நடந்தது. நிஜ ஹீரோக்களுக்கு என் கையால் விருது வழங்கி கௌரவித்ததில் எனக்கு பெருமை. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அறந்தாங்கி அப்துல்லா கனி, ஈமான் அமைப்பு பொதுச்செயலாளர் ஹமிது யாசின் & நண்பர்களுக்கு எனது வாழ்த்தும் நன்றியும் என்று சசிகுமார் கூறியுள்ளார்.







