இந்தியாவில் எங்கும் எப்போதும் நீக்கமற நிறைந்திருக்கும் கொசுவை ஒழிக்க பொதுமக்கள் பயன்படுத்தும் கொசுவிரட்டி பொருட்களின் விற்பனை மதிப்பு 8000 கோடி ரூபாயாக உள்ளது.
இந்தியாவில் கொசு விரட்டி சந்தை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காண்கிறது. மக்கள் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது. கொசுக்களால் மலேரியா, டெங்கு காய்ச்சல் மற்றும் பல்வேறு விதமான காய்ச்சல் ஏற்படுகிறது. தேங்கி நிற்கும் நீர் கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கும், அதிக பரவலுக்கும் வழி வகுக்கிறது. மோசமான சுகாதார வசதிகள், நிரம்பி வழியும் கழிவு நீர், குப்பைகள், சரிசெய்யப்படாத மழைநீர் வடிகால் அமைப்பு, திடக்கழிவுகள் ஆகியவற்றின் மூலம் கொசு அதிகமாக பரவுகிறது.
அரசு அமைப்புகள் கொசுவை ஒழிக்க தனி துறையையே கட்டமைத்து, கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிட்டாலும் கொசுவை கட்டுப்படுத்த முடியவில்லை. கொசுக்களிலிருந்து தற்காத்துக் கொள்ள, பொதுமக்கள் கொசு வலை, கொசு விரட்டி சுருள்கள், மின்சார பேட்டரியில் கரையும் கொசு விரட்டி சோப்புகள், நீர்ம மற்றும் வாயு நிலையிலுள்ள கையடக்க வடிவிலான கொசு விரட்டி தெளிப்பான்கள், கொசு விரட்டி களீம்புகள், போன்றவற்றை நாடுகின்றனர்.
இதையும் படியுங்கள் : பிச்சைக்காரன் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
2016ம் ஆண்டின் நிலவரப்படி, இந்தியாவில் கொசு விரட்டி பொருட்களின் சந்தை மதிப்பு 4000 கோடி ரூபாயாக இருந்தது. இத்துறை ஆண்டுக்கு 10 முதல் 15 சதவீதம் வரை வளர்ச்சியடைகிறது. நடப்பு நிதியாண்டில் கொசு விரட்டி பொருட்களின் சந்தை மதிப்பு 8000 கோடி ரூபாயாக உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த கொசு விரட்டி பொருட்களில் ரெக்கிட் பென்கிசர், ஜோதி லேபரட்டரீஸ், கோத்ரேஜ் சாரா லீ மற்றும் எஸ் சி ஜான்சன் ஆகிய நான்கு முக்கிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. பல்சரா ஹைஜீன், பேயர் மற்றும் டெயின்வாலா கெமிக்கல்ஸ் ஆகிய நிறுவனங்களும் இத்துறையில் உள்ளன.
கொசு விரட்டி பொருட்களில் சந்தையில் அதிக விற்பனையாகும் தயாரிப்புகளாக மார்ட்டின், மேக்சோ மற்றும் குட் நைட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகள் உள்ளன. கிராமப்புறங்களில் கொசு விரட்டி சுருள், கொசு விரட்டி சோப்புகளின் தேவை அதிகரித்து வருகிறது. நகர்ப்புறங்களில் நீர்ம நிலையிலுள்ள கையடக்க வடிவ கொசு விரட்டி தெளிப்பானுக்கு அதிக தேவை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொசு விரட்டி பொருட்களின் விற்பனையில் நகர்ப்புறத்தின் பங்கு 70 சதவீதமாக இருக்கிறது.
நகர்ப்புற மக்கள், கொசுக்களால் பரவும் நோய்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர். நகர்ப்புறங்களில் இல்லத்தில் 2 அல்லது 3 இடங்களில் பயன்பாடு, மற்றும் கொசு விரட்டு தெளிப்பான் என தனிநபர் ஒருவர் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வரை கொசு விரட்டிக்காக பல வழிமுறைகளில் செலவழிக்கிறார்.
இந்தியாவில் கொசு விரட்டிகள் 10 லட்சம் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
கொசு விரட்டிகளின் தேவை அதிகமாக இருக்கும் அளவுக்கு, கொசு விரட்டியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் குறித்த விழிப்புணர்வானது ,பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கொசு விரட்டியில் பயன்படுத்தப்படும் அலெத்ரின் ((Allethrin)) கண், தோல், சுவாசக்குழாய் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கும். கொசு விரட்டி பொருட்களை நீண்டகாலமாக வெளிப்படுத்துவதால் மூளை, கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம் என மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கோள் காட்டி நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதனால், உணவுப்பொருட்கள், அழகு சாதனப்பொருட்கள் என பலவற்றில் ஆர்கானிக் எனப்படும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மாறுவதைப்போல், இயற்கையான மூலிகைகள், கொண்டு தயாரிக்கப்படும் கொசு விரட்டி பொருட்களுக்கு மக்கள் தற்போது மாறி வருகின்றனர்.
- ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ்.







