சிங்கார சென்னை என்ற அழைக்கப்படும் சென்னை மாநகரில் ஒரே நேரத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் காரணமாக சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. சீரழியும் சென்னை சாலைகள் குறித்து நியூஸ் 7 தமிழ் நடத்திய கள ஆய்வை விரிவாக பார்க்கலாம்….
சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மழை நீர் வடிகால் பணிகள் காரணமாக சென்னை மாநகர் முழுவதும் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ளன. பருவ மழைக்கு பின் ஜனவரி மாதத்தில் சாலை போடும் பணிகள் தொடங்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்திருந்தது. அதற்காக மாநகராட்சி சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 1,022 சாலைகள் பழுதடைந்துள்ளதாக கண்டறியப்பட்டது. ஆனால் இதுவரை எந்த சாலைகளும் பணிகள் முழுமையாக சரி செய்யப்படவில்லை.
மணப்பாக்கம், கொட்டிவாக்கம், வளசரவாக்கம் மற்றும் பாலவாக்கத்தில் உள்ள ஒரு சில சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்கள், இங்கு சாலைகள் நீண்டகாலமாகவே குண்டும் குழியுமாக சேதமடைந்து காணப்படுவதாகவும், இந்த சாலைகளில் குழந்தைகளுடன் பயணிக்கும் பொழுது நிறைய விபத்துகள் ஏற்பட நேர்வதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.
அதிலும் குறிப்பாக குழந்தைகளை குண்டும் குழியுமாக இருக்கும் இந்த சாலைகளில் இருசக்கர வாகனத்தில் அமரவைத்தது அமர வைத்து பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லும் பொழுது, முதுகுவலி போன்ற சிறு சிறு உடல் உபாதைகளும் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்களின் நலன்களில் அக்கறை கொண்டு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இந்தப் பகுதிகளில் சாலை அமைக்கும் பணியை முன்னுரிமை அடிப்படையில் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீட்டு இணைப்புகளை வழங்குவதற்கான மெட்ரோ வாட்டர் பணி, மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளால் ஆற்காடு சாலை ஏற்கனவே மோசமான நிலையில் இருப்பதால், அப்பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே இந்த சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன.
கடந்த 6 மாதங்களில், வீட்டு இணைப்புகளை வழங்குவதற்காகவும், மெட்ரோவாட்டர் பணிகளுக்காகவும் சாலைகளை தோண்டி பணிகளை மேற்கொண்ட மாநகராட்சி நிர்வாகம் இதுவரை அதனை முழுமையாக முடிக்காமல் கிடப்பில் போட்டிருப்பதாலையே, அவற்றின் நிலை மோசமடைந்துள்ளது என்கின்றனர் இந்த பகுதிவாசிகள். மேலும் நல்ல நிலையில் இருந்த சாலைகள் குழாய் பதிக்க தோண்டப்பட்ட நிலையில், அதை மீண்டும் போடாமல் விட்டுவிட்டனர் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இவ்வாறாக இருக்கும் இந்த சாலிகளில் இருசக்கர வாகனம் ஓட்டுவது அடிக்கடி முதுகுவலிக்கு ஆளாக நேரிடுவதனாகவும் கூறுகின்றனர். இந்த பகுதி கவுன்சிலர்கள் சாலைகளின் நிலைமையை நன்கு அறிந்திருந்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மெட்ரோவாட்டர் பணிகள் எப்போது முடியும் என்பதையும் தெளிவாக கூறாமல் இப்படி சாலைகளை சேதப்படுத்தி பொதுமக்களை சிரமப்படுத்துவது மிகுந்த வேதனையளிப்பதாகவும் கூறியுள்ளனர்.
பொதுவாக வளசரவாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் 2 முதல் 3 கிமீ தூரத்தைக் கடக்க 10 முதல் 15 நிமிடங்கள் எடுக்கும். இப்போது ஒரு மணி நேரம் ஆகிறது என்கின்றனர் அப்பகுதிவாசிகள். கடந்த வாரங்களில் பெய்த சிறிய மழைக்குப் பிறகு, காந்தி சாலை, இந்திரா காந்தி சாலை மற்றும் முரளி கிருஷ்ணா நகர் மெயின் சாலைகளில் உடைப்புகள் மற்றும் பள்ளங்கள் உருவாகி, சேறும் சகதியுமாக இருந்ததால், பயணிகள் அவற்றைச் சுற்றி வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சாலையின் பெரும்பாலான இடங்களில் ஆங்காங்கு குழிகள் தோண்டப்பட்டு அப்படியே கிடப்பதால் வாகன ஓட்டிகள் குறுகிய பாதைகளில் கூட பக்கவாட்டில் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
சிறுமழை பெய்தால் குண்டும் குழியுமாக உள்ள சாலைக்கு உதாரணம் வளசரவாக்கம் காவல் நிலையத்தை அடுத்துள்ள ராஜகோபாலன் தெரு. தற்போது நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளால் ஆற்காடு சாலை குறுகலாக மாறியுள்ளது. மேலும் சாலைகள் மோசமான நிலையில் இருப்பதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. காலப்போக்கில், நிலைமை மேலும் மோசமடைகிறது என்று பகுதிவாசிகள் கூறுகின்றனர்.
இதுதவிர மழைநீர் வடிகால்களை சாலையோரம் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் சாலையின் மையப்பகுதியை தோண்டியதால் தற்போதைய நிலைமை இன்னும் மோசமடைந்திருப்பதாக அந்த பகுதி குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதேபோல் ராமாபுரம் சாலை மிகவும் மோசமாக உள்ளது. அரசு அதிகாரிகள் இந்த பகுதிக்கு அடிக்கடி சென்று சாலைகள் எப்படி உள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டிருந்தால் இந்த நிலை எப்போதோ சரியாகியிருக்கும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். வளசரவாக்கத்தில் சாலைகள் எப்போதும் இப்படித்தான் இருக்கும் என்கிறார் 60 வயதான முதியவர் ஒருவர். “கிரேட்டர் சென்னை மாநகராட்சியில் (ஜிசிசி) சேர்க்கப்பட்ட பிறகு, ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் வீடுகளுக்கு மெட்ரோவாட்டர் இணைப்புகளை வழங்குவதற்காக சாலைகள் தோண்டப்பட்ட பிறகு, கனரக வாகனங்களின் இயக்கத்தால் மேலும் சாலைகள் மோசமாகிவிட்டன. அரை கிலோமீட்டர் தூரத்தில் நீங்கள் 20 தடைகளை எளிதாகக் கண்டுபிடிக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
அந்த பகுதியில் மருந்தகம் வைத்திருக்கும் ஒருவர், பல வாடிக்கையாளர்கள் இந்த மோசமான சாலைகளில் பயணம் செய்து முதுகுவலிக்கு ஆளாகி தற்போது அதற்கு நிவாரணம் தேடுவதாக கூறுகிறார். மாற்றம் விரைவில் வரப்போவதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“சாலைகள் எல்லா நேரத்திலும் தோண்டப்படுகின்றன, ஆனால் அவற்றை முறையாக மூடுவதற்குப் மட்டும் எதுவும் செய்யப்படவில்லை. முக்கியமாக வளசரவாக்கத்தில் இருந்து ராமாபுரம் செல்லும் எஸ்ஆர்எம் கல்லூரி செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது என்பதாலையே பயணத்திற்காக இந்த சாலையை தேர்வு செய்வதில்லை என்கின்றனர் ஆட்டோ ஓட்டுனர்கள்.
பள்ளம் நிறைந்த சாலைகளில் பயணிக்கும் பொதுமக்களுக்கு முதுகுத் தடம் பாதிப்பு அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். முதுகுத்தடம் பாதிப்பிலிருந்து எவ்வாறு தன்னை பாதுகாத்துக்கொள்வது என்பது தொடர்பாக எலும்பியல் மருத்துவர் ஆறுமுகத்துடன் நமது செய்தியாளர் சுகந்தன் கலந்துரையாடல் நடத்தியுள்ளார். அப்போது இம்மாதிரியான சாலைகளில் பொதுமக்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக பயணம் மேற்கொள்ள வேண்டும், முதுகு தண்டுவடம் பாதிக்கப்படும் பொழுது என்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் என்பதனையும் மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.
GCC தரவுகளின்படி, வளசரவாக்கத்தில் 3,184 சாலைகள் உள்ளன. மேலும் 254 சாலை குழிகள் தோண்டப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில், மேலும் மெட்ரோவாட்டர் பணிக்காக 1,282 சாலைகளை வெட்டுவதற்கு அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பள்ளம் நிறைந்த சாலைகளில் பயணிக்கும் நிலை எப்போது மாறும் என்பதே பொதுமக்கள் பலரது கேள்வியாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா













