கட்டுரைகள்

தி ரைசிங் சன்


இலா. தேவா இக்னேசியஸ் சிரில்

கட்டுரையாளர்

தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக மாறியுள்ள மாநில கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் நீண்ட கால திட்டங்களுடனும், அடுத்து மத்தியில் அமையவுள்ள அரசில் தங்களின் பங்களிப்பை முக்கியத்துவப்படுத்தும் பணிகளின் தொடர்ச்சியாக அதிகாரப்பூர்வ ஆங்கில வார இதழுக்கு மீண்டும் உயிர்கொடுத்துள்ளது

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதுதான் திமுகவின் தாரக மந்திரம். மத்தியில் கூட்டாட்சி அமைவதற்கான பங்களிப்பை அரை நூற்றாண்டு காலமாக திமுகவை வழிநடத்திச்சென்ற கருணாநிதி கடந்த காலங்களில் நிரூபித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி என்ற ஒற்றை நிலை மாறிய காலம்தொட்டு மத்தியில் அமையும் அரசுகளால் தவிர்க்க முடியாத சக்தியாக திமுக விளங்கி வருகிறது.

உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கருத்தினை மீண்டும் அழுத்தம் திருத்தமாக ஒலித்து வரும் முக ஸ்டாலின், துறைமுக சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான ஆதரவை கேட்டு 9 கடலோர மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியதுடன், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன்களை திருப்பிச்செலுத்த கால அவகாசம் கோரி 12 மாநில முதலமைசார்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்

வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே கட்சிகள் தயாராகி வரும் நிலையில்,எதிர்க்கட்சிகளின் தேர்வில் முக்கிய இடம் பிடிக்கும் மாநில கட்சியாக திமுக உள்ளது. இதனையடுத்து திமுகவின் கொள்கைகளை, திமுக அர்சின் செயல்பாடுகளை பிற மாநிலத்தவர், வெளிநாட்டினர் அறிந்து கொள்ளும் வகையில் தங்களின் ஆங்கில வார இதழான தி ரைசிங் சன் னுக்கு மீண்டும் உயிர்கொடுத்துள்ளது.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி 80 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்து பயணித்து வரும் நிலையில், திமுகவின் கருத்துகளை பிற மாநிலத்தவர் அறிந்துகொள்ள கடந்த 1971 ஆம் ஆண்டு கலைவாணர் அரங்கில் தொடங்கப்பட்டதுதான் தி ரைசிங் சன். முரசொலி மாறனை ஆசிரியராகக் கொண்டு தொடங்கப்பட்ட அந்த ஆங்கில வார இதழ், பல்வேறு காரணங்களால் 1975 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

மீண்டும் கடந்த 2005 ஆம் ஆண்டு அண்ணா அறிவாலயத்தில் அப்போதைய திமுக தலைவ்ரான கருணாநிதியால் மீண்டும் வெளியிடப்பட்ட தி ரைசிங் சன் போதிய வரவேற்பு இல்லாததன் காரணமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.

அதற்கு மீண்டும் உயிர்கொடுத்துள்ளார் தற்போதைய திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின். வரும் செப்டம்பர் மாதம் திமுக தொடங்கப்பட்ட 17 ஆம் தேதி அந்த வார இதழை வெளியிட திட்டமிட்டு அதற்கான பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளார். காலமாற்றத்திற்கேற்ப டிஜிட்டல் வடிவிலும் வெளியாகும் வார இதழ் வெளியீட்டு நிகழ்வை டில்லி அரசியலின் அடுத்தக்கட்ட நகர்வாகவும் மேற்கொள்ளவுள்ளார்

டில்லியில் கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தை திறந்து வைக்கும் நிலழ்வையும், தி ரைசிங் சன் ஆங்கில வார இதழ் வெளியீட்டு நிகழ்வையும் பிற மாநிலங்களைச் சேர்ந்த், தேசிய அரசியல் மேற்கொள்ளும் நட்பு கட்சிகளின் தலைவர்களை அழைத்து வெளியிடவும் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ள திமுகவிற்கு ஆங்கில வார இதழ் ஒன்றும் புதியதும் இல்லை. அண்ணாவின் தமிழை கேட்டு மகிழ்நதவர்களுடன், அவரின் ஆங்கில அடுக்கு தொடர்களை கேட்டு ரசித்த வட மாநிலத்தவரும் உண்டு. தமிழ்ப் புலமை பெற்ற அண்ணா ஹோம் லேண்ட் என்ற ஆங்கில இதழையும் நடத்தியவரே.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ஆரும் அண்ணாவைப்பற்றி குறிப்பிடும்போது, திமுக போன்ற ஒரு அரசியல் அமைப்பு அனைத்திந்திய அளவில் அமைய வேண்டும் என்று பல நேரங்களில், பலர் பேரறிஞர் அண்ணா அவர்களிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதுண்டு என தெரிவித்துள்ளார்.

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கினார் என அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை செயல்படுத்தியதற்கு பாராட்டப்படும் ஸ்டாலின், கருணாநிதியால் கொண்டு வர திட்டமிடப்பட்ட மேலவையை கொண்டு வருவதற்கான பணியை தொடங்கியுள்ள ஸ்டாலின், அண்ணாவிடம் பலரும் கேட்டுக்கொண்ட இந்திய அளவில் திமுகவை கட்டமைப்பதற்கான பணியை தி ரைசிங் சன் மூலம் தொடங்குவதாக கருதலாம்….

 

கட்டுரையாளர்: இலா. தேவா இக்னேசியஸ் சிரில்

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் 70% பள்ளிகளில் இணைய வசதி இல்லை! – புள்ளிவிவர ரிப்போர்ட்.

Ezhilarasan

மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு பாதிப்பா? பதிலளிக்கிறார் மத்திய அரசு விஞ்ஞானி!

Halley karthi

நையாண்டியால் மக்களை கவர்ந்த மணிவண்ணன்

Vandhana