உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று தமிழ்நாடு முழுவதும் வெளியாகியுள்ளது.
சென்னை காசி தியேட்டரில் சிறப்பு காட்சி காலையில் திரையிடப்பட்டது. இதனால் அங்கு குவிந்த உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள், மேள தாளம் முழங்க சிலம்பாட்டம் உட்பட பல சாகசங்களில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த உதயநிதி கட் அவுட்டுக்கு பால் அபிசேகம் செய்து, பட்டாசு வெடித்தும் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு உதயநிதி ரசிகர் நற்பணி மன்ற செயலாளர் பாபு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, உதயநிதி ரசிகர் நற்பணி மன்ற செயலாளர் பாபு, ‘சமூக நீதியை தனது இதயத்தில் ஏந்தி மக்களுக்காக பாடுபடும் படமாக நெஞ்சுக்கு நீதி திரைப்படம் அமைந்துள்ளது’ என கூறினார்.
இதேபோல, சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமைந்துள்ள ஶ்ரீ பிரியா திரையரங்கில் நாளை உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் திமுகவை சேர்ந்த தற்போதைய மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் நாளை மாலை 6.30 காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுக்களையும் முன்பதிவு செய்து உள்ளார். மேலும், அவர் இளைஞர்களுக்கும் கட்சி பிரதிநிதிகளுக்கும் இலவசமாக வழங்க உள்ளாதாக போஸ்டர்களை பகிர்ந்துள்ளார். அந்த போஸ்டர்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது. மானாமதுரை சட்டமன்ற உறுப்பினரின் இந்த செயல், பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அண்மைச் செய்தி: ‘நீட் விலக்கு; குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி’
அதேபோல, பெரம்பலூரில் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு காவலர் ஒருவர் வாழ்த்து தெரிவித்து ப்ளக்ஸ் வைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரித்த போது, மருத்துவ விடுப்பில் இருக்கும் காவலர் கதிரவன் என்பவர் வைத்த ப்ளக்ஸ் என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அந்த ப்ளக்ஸ் அகற்றப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








