தீவன உயர்வால் தான் முட்டை விலை அதிகரித்துள்ளது என தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் சங்கதலைவர் சிங்கராஜூ தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு குறித்து தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், நாமக்கல் மண்டலத்தில் வரலாறு காணாத வகையில் முட்டை விலை ரூ.5.35 ஆக உயர்ந்துள்ளது. தீவன விலை உயர்வால் தான் முட்டை விலை உயர்ந்துள்ளது. இனிவரும் நாட்களிலும் ரூ.6 வரை முட்டை விலை உயர வாய்ப்புள்ளது.
கடந்த 4 மாதங்களில் தீவன விலை உச்ச உச்சபட்சமாக உயர்ந்ததால் பண்ணைகள் நடத்த
முடியவில்லை. ஒரு லட்சம் கோழி வைத்திருந்த பண்ணையாளர்களுக்கு 4 மாதங்களில் ரூ.2.50 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. வருவாய் இழப்பால் கடந்த 4 மாதங்களில் கோழி குஞ்சுகளை பண்ணைகளில் விடுவது நிறுத்தப்பட்டன. தீவனங்கள் போட முடியாமல் கோழிகள் விற்பனை செய்யப்பட்டன.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி 60 சதவிகிதமே நடைபெறுகிறது. தீவன விலை உயர்வால் வங்கிகடன் செலுத்தவும், கோழி பண்ணைகளை நடத்த முடியவில்லை. முட்டை விலை உயர்ந்தாலும் மக்கள் வாங்குவார்கள் என நம்புகின்றோம். சத்துணவு டெண்டருக்கும் முட்டை விலை உயர்வுக்கும் சம்பந்தமே இல்லை. தவறான கருத்து நிலவி வருகிறது. சத்துணவுத் திட்டத்திற்கு வழங்கக்கூடிய முட்டை டெண்டர் விடுவதற்கு 4 மாதங்கள் உள்ளன.








