ஓவியர் சந்தோஷ் நாராயணனின் ஓவியத்தை மீண்டும் பகிர்ந்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். அப்படி என்ன ஓவியம் அது என்பதனை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
எழுத்தாளரும் ஓவியருமான சந்தோஷ் நாராயணன் வரைந்த தமிழணங்கு ஓவியம் சமீபத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. திரிந்த சடையுடனும், கயல் விழிகளுடனும், வெள்ளை நிற சேலையில் ழகர வேலை ஏந்தியபடி கருப்பு நிற தோற்றத்தில் காட்சியளித்த அந்த ஓவியத்தை சந்தோஷ் நாராயணன் வரைந்து இருந்தாலும், இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பிறகுதான் அது பிரபலமானது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், தமிழ்நாடு முதலமைச்சர் உட்படப் பல அரசியல் கட்சித் தலைவர்களும் அதனைப் பகிர்ந்தனர். அதனைத்தொடர்ந்து, அதற்கு எதிராக, தமிழ்ந்நாட் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்த் தாய் ஓவியத்தை வெளியிட்ட நிகழ்வுகள் எல்லாம் நடந்தது.
அண்மைச் செய்தி: ‘இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் வேண்டுமா?’
இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மீண்டும் ஒரு ஓவியத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த படமும் எழுத்தாளரும் ஓவியருமான சந்தோஷ் நாராயணன் வரைந்த ஓவியம் எனத் தெரிகிறது. நேராகப் பார்த்தால் சூஃபி நடனம் போன்றும், தலை கீழாகப் பார்த்தால் ஏ.ஆர்.ரகுமான் உருவமும் தெரிவதுபோல உள்ள அந்த ஓவியம் தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.









