44-வது செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில், வெள்ளை மற்றும் கறுப்பு நிற காய்களைத் துணியால் மறைத்து எடுத்து வரப்பட்டதில், இந்திய அணி ஆடும் செஸ் காயைப் பிரதமர் தேர்ந்தெடுத்தார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஒட்டி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதி அறிமுகப்படுத்தப்பட்டது. 75 நகரங்கள் வழியாக, சுமார் 27 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து சென்னை வந்த ஜோதியை, தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரக்ஞானந்தா, கோனேரு ஹம்பி உள்ளிட்டோரிடம், விஸ்வநாதன் ஆனந்த் வழங்கினார். அதன் பின்னர், செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஏற்றப்பட்டது.
நிகழ்ச்சியில், நாளை நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்குக் கறுப்பு நிற காய் தேர்வு செய்யப்பட்டது. வெள்ளை மற்றும் கறுப்பு நிற காய்களைத் துணியால் மறைத்து எடுத்து வரப்பட்டது. அப்போது கறுப்பு நிற காயைப் பிரதமர் மோடி தேர்வு செய்தார். பின்னர் பேசிய பிரதமர், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செய்துள்ளதாகப் பாராட்டு தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘‘பிரதமருக்கான உரிய மரியாதையை இந்த அரசு வழங்குகிறது’ – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ’
மேலும், திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி, உலகில் தொன்மையான மொழியாகத் தமிழ் உள்ளதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சதுரங்கத்திற்கும், தமிழ்நாடு வரலாற்றுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகக் கூறினார். இந்த போட்டியை முடித்து விட்டு சொந்த நாடு திரும்பும் வீரர்கள், இனிய நினைவுகளுடன் செல்வார்கள் என அவர் தெரிவித்தார்.








