குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி, மக்களவை தலைவர் உள்ளிட்ட யாரும் அழைப்பு விடுக்கவில்லை என குடியரசு தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கடந்த மாதம் 28-ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்நிலையில் நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் திறந்து வைப்பதே மரபு எனவும், அதை மத்திய அரசு மீறியுள்ளதாகவும் சர்ச்சை கிளம்பியது. மேலும் நாடாளுமன்ற திறப்பு விழாவை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், திமுக, உள்பட 19 கட்சிகள் புறக்கணித்தன.
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை வைத்து புதிய நாடாளுமன்றத்தை திறக்காததோடு, விழாவிற்கே அவர் அழைக்கப்படாதது குறித்தும் கடும் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் குடியரசு தலைவர் நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு அழைக்கப்பட்டதாக பாஜகவினர் கூறிவந்தனர். இதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. விழாவிற்கு திரௌபதி முர்முவிற்கு அதிகாரபூர்வ அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை என்பதை குடியரசு தலைவர் மாளிகை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் குடியரசு தலைவர் மாளிகையிடம் சில கேள்விகளை முன் வைத்தார். அதில், புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் அல்லது வேறு ஏதேனும் அதிகாரியிடமிருந்து ஜனாதிபதிக்கு அழைப்பு வந்ததா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த குடியரசு மாளிகை, அத்தகைய அழைப்பு ஏதும் வரவில்லை என்றும், அதனால், அதுபோன்ற எந்தத் தகவலும் செயலகத்தில் இல்லை என்றும் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், இந்தியக் குடியரசுத் தலைவர் அழைக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாகவும் செய்திச் சேனல்களிலும் பாஜக பொய் கூறியது ஏன் எனவும் சாகேத் கோகலே கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை முறையாக அழைக்காதது ஏன் என வினவியுள்ள அவர், இது குடியரசுத் தலைவரை இழிவுபடுத்தும் செயல் எனவும் குற்றம் சாட்டினார்.







