வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு… தங்க செயின் அணிவித்து கொண்டாடி மகிழ்ந்த உரிமையாளர்!

கடலூரில் சிவா என்பவர் தனது வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம்மில் பலருக்கு மிகவும் பிடித்த செல்லப்பிராணிகளில் ஒன்று நாய். செல்லப்பிராணி என்பதை தாண்டி பலர் தங்களது…

கடலூரில் சிவா என்பவர் தனது வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நம்மில் பலருக்கு மிகவும் பிடித்த செல்லப்பிராணிகளில் ஒன்று நாய். செல்லப்பிராணி என்பதை தாண்டி பலர் தங்களது வீட்டில் உள்ள குழந்தைகளைப் போன்று பாசமாக வளர்ப்பார்கள். சரியான நேரத்தில் தடுப்பூசி என உடல் நலத்திலும், மிகுந்த அக்கறையோடு செயல்படும் பலரை நாம் பார்த்திருப்போம். இப்படி தங்கள் நாய்களை மிகுந்த அக்கறையோடும், பாசத்தோடும் கவனிப்பது ஒருபுறம் இருந்தாலும், சில நேரங்களில் நாய்களை வளர்ப்போர் செய்யும் செயல்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

அந்த வகையில் கடலூரில் ஒருவர் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த தம்பிப்பேட்டை பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவா. இவர் தனது வீட்டில் ஒரு ஆண்டிற்கு மேலாக கருவாச்சி எனும் நாயை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கர்ப்பிணியாக இருக்கும் கருவாச்சிக்கு பத்திரிக்கை அடித்து, ஊர் முழுவதும் தெரிவித்து வளைகாப்பு நடத்தியுள்ளார். கருவாச்சிக்கு தங்க ஜெயின் அணிவித்தும் மகிழ்ந்தார்.

உறவினர்களும் சீர்வரிசை தட்டுடன் வந்து, கருவாச்சிக்கு வளையல் அணிவித்து மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.