திருமண இணையதளம் மூலம், நட்பை ஏற்படுத்தி, பெண்ணிடம் 10 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக ஆந்திராவைச் சேர்ந்தவரை சென்னை சைதாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த விவாகரத்தான பெண் ஒருவர், மறுமணத்திற்காக திருமண இணையதளம் ஒன்றில் பதிவு செய்து வைத்திருந்தார். இதனை பார்த்து, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 45 வயதான மனோகரன் என்பவர், அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தமக்கு திருமணமாகி விவாகரத்தாகி விட்டது என்றும், தாம் பைப் லைன் காண்ட்ராக்டராக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மாதம் 3 லட்சம் ரூபாய் வருமானம் வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, மனோகரனை திருமணம் செய்து கொள்ள அந்த பெண் முடிவு செய்த நிலையில், இருவரும் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, தமக்கு விபத்து நடந்துள்ளதாகவும் சிகிச்சைக்காக பணம் தேவை என்றும் கூறி, சிறுக சிறுக 10 லட்சம் ரூபாய் வரை அந்த பெண்ணிடம் மனோகரன் வாங்கிக் கொண்டு தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், அந்த பெண், விசாரித்த போது, மனோகரன் ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த பெண் அளித்த புகாரின்பேரில், மனோகரனை போலீசார் கைது செய்தனர்.