இண்டிகோ விமானத்தில் நின்றபடியே பயணித்த பயணி! மீண்டும் டெர்மினலுக்கு திரும்பிய விமானம்!

மும்பையிலிருந்து கிளம்ப இருந்த விமானம் ஒன்றில் நின்றபடி பயணித்த பயணியால் மீண்டும் விமானம் டெர்மினலுக்கே திருப்பப்பட்டது. மும்பையிலிருந்து வாராணசிக்கு கிளம்பிய இண்டிகோ விமானம் புறப்படுவதற்கு ஓடுதள பாதை பயணத்தை எட்ட இருந்தபோது, விமானத்தின் கடைசி…

மும்பையிலிருந்து கிளம்ப இருந்த விமானம் ஒன்றில் நின்றபடி பயணித்த பயணியால் மீண்டும் விமானம் டெர்மினலுக்கே திருப்பப்பட்டது.

மும்பையிலிருந்து வாராணசிக்கு கிளம்பிய இண்டிகோ விமானம் புறப்படுவதற்கு ஓடுதள பாதை பயணத்தை எட்ட இருந்தபோது, விமானத்தின் கடைசி இருக்கையருகே பயணி ஒருவர் நின்றபடி பயணிப்பதை விமான பணியாளர் ஒருவர் கண்டறிந்தார். அவர் விடுத்த எச்சரிக்கையை அடுத்து, இண்டிகோ விமானம் புறப்படும் முயற்சியை கைவிட்டு மீண்டும் டெர்மினலுக்கே திரும்பியது. நின்றபடி பயணித்தவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இண்டிகோ விமான சேவை நிறுவனத்தின் தவறு வெளிப்பட்டது.

விமான சேவை நிறுவனங்கள், தங்கள் பயணியர் விமானங்கள் காலி இருக்கைகளுடன் பறப்பதை தவிர்க்க சில நேரங்களில், இருக்கைகளின் எண்ணிக்கைக்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்பனை செய்வது வழக்கம். கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்யும் பயணிகள், போதிய எண்ணிக்கையில் பயணிகள் திரளாதது உள்ளிட்ட பல காரணங்களினால், கூடுதலாக விற்பனையாகும் டிக்கெட்டுகளால் பிரச்னைகள் எழுவதில்லை.

ஆனால் மும்பையிலிருந்து வாராணசிக்கு இன்று (மே 21) காலை கிளம்பிய இண்டிகோ விமானத்தில், அதன் இருக்கைகள் அனைத்தும் நிரம்பியிருந்தது. பயணிகளில் ஒருவர் தனக்கான இருக்கை கிடைக்காததில், விமானத்தின் கடைசி வரிசையில் நின்றுகொண்டிருந்தார். இண்டிகோ விமானம், நின்றபடி பயணிப்பவருடன் வானில் பறக்க இருந்தது. விமான நிலையத்தின் டெர்மினலில் இருந்து ஓடுபாதைக்கு செல்வதற்கான ’டாக்ஸிங்’ எனப்படும் ஊர்ந்து செல்லும் பயண நேரத்தில், கூடுதல் பயணியை விமான பணியாளர் கண்டறிந்தார்.

இதனால் மீண்டும் டெர்மினலுக்கு திரும்பிய இண்டிகோ விமானம், ஒற்றைப் பயணியை இறக்கிவிட்டு, மீண்டும் ஒருமுறை வழக்கமான சரிபார்ப்பு நடைமுறைகளுக்குப் பின்னரே கிளம்பியது. இதனால் சுமார் ஒரு மணி நேர தாமதத்துக்குப் பின்னரே அந்த விமானம் வாராணசிக்கு கிளம்பியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.