பனைத் தொழில் செய்வது அரசுப் பணியாக விரைவில் மாற்றப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
விழுப்புரம் அருகேயுள்ள பூரிகுடிசை கிராமத்தில் “நியூஸ் 7 தமிழ் அக்ரி” மற்றும் “பனங்காடு அறக்கட்டளை” சார்பில் நடைபெறும் இரண்டாம் நாள் பனைத் திருவிழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
வேளாண்மை எப்படி வீழ்த்தப்பட்டதோ அப்படிதான் பனையும் வீழ்த்தப்பட்டுள்ளது. பனையின் அருமை தெரியாமல் பனை தொழில் இழிவு என்பது போல் சிலர் பார்க்கின்றனர். நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் மாற்று பொருளாதரம் வர வேண்டும்.
தண்ணீர் இன்று விற்பனை பொருளாக மாறியுள்ளது. நெகிழியை பயன்படுத்தி நாடே குப்பை மேடாக மாறியுள்ளது. இன்று அனைத்திலும் சீனப் பொருட்கள் உள்ளன.
பனை தொழில் செய்வதும் அரசு பணி என விரைவில் மாற்றப்படும். உலக நாடுகள் இயற்கை உணவுக்கு திரும்புகின்றனர். உற்பத்தி இல்லை என்பதால் கலப்படம் ஏற்படுகிறது.
நான் ஆட்சிக்கு வந்தால் சர்க்கரையை நீக்கிவிட்டு கருப்பட்டி வழங்கப்படும் என அறிவித்திருந்தேன். அதை தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கருப்பட்டி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அது நடந்ததா என்பது தெரியவில்லை.
“பிரதமரே முதன்மையான மொழி இந்தியாவில் தமிழ்தான்” என்று கூறுகிறார். அத்தகைய சிறப்பு வாய்ந்தது தமிழ் மொழி.
தேசிய மதுபானமாக தென்னம்பால், பனம்பால் இருக்க வேண்டும் என அறிவித்தால் எல்லாம் சரியாகிவிடும். மண்ணை மலடாக்கி கொண்டிருக்கிற சீமை கருவேல மரங்கள் தமிழகத்தில் உள்ளன. ஆனால் கேரளாவில் ஒரு சீமை கருவேல மரங்களைக் கூட பார்க்க முடியாது என்று சீமான் பேசினார்.
-மணிகண்டன்








