வளர்ச்சி குறியீட்டில் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்றுவதே ஒரே இலக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு சரபோஜி கல்லூரி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ், சிவசங்கர், அரசு கொறடா கோவி.செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் 98 கோடி ரூபாயில், முடிவுற்ற 90 திட்டப்பணிகளை தொடங்கிவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 894 கோடி ரூபாய் மதிப்பிலான 134 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், 45 ஆயிரம் பயனாளிகளுக்கு 248 கோடியே 45 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஜராஜசோழனோடு தஞ்சை மண்ணையும் பெருமைப்படுத்திய அரசு திமுக அரசுதான் என பெருமிதம் தெரிவித்தார். வேளாண் புரட்சிக்கு அடித்தளமாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறிய அவர்,
குறுவை சாகுபடியில் நிர்ணயித்த இலக்கை அடைய அரசு எடுத்த முயற்சிகளே காரணம் என தெரிவித்தார். மேலும், காவிரி உரிமையை நிலைநாட்டிய இயக்கம் திமுக என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.








