INDIA கூட்டணியின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 25-26 தேதிகளில் மும்பையில் நடைபெறும்!!!

INDIA கூட்டணியின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 25-26 தேதிகளில் மும்பையில் நடைபெறும் என எதிர்கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ், திமுக உட்பட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.…

INDIA கூட்டணியின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 25-26 தேதிகளில் மும்பையில் நடைபெறும் என எதிர்கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ், திமுக உட்பட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. ஜூன் 23ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, ஜூலை 18-ஆம் தேதி பெங்களூருவில் 2வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாட்டில் இருந்து திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை பங்கேற்றன. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் என 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் தேசிய அளவில் பொது வேட்பாளரை நிறுத்துவது, அந்தந்த மாநிலங்களில் பெரும்பான்மையாக உள்ள மாநில கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ.க. வேட்பாளருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

அப்போது இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் பதவியில் காங்கிரஸ் கட்சிக்கு விருப்பம் இல்லை என்றும் இந்த கூட்டத்தின் நோக்கம் அதிகாரத்தை பெறுவது அல்ல என்றும், நமது அரசியலமைப்பு, ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதியை பாதுகாப்பதே என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்ற நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது;

எங்கள் கூட்டணி (இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி) INDIA என்று அழைக்கப்படும். அடுத்த எதிர்க்கட்சி கூட்டம் மும்பையில் நடைபெறும். அது தொடர்பான தேதி அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். மணிப்பூர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களின் பெயர்கள் மும்பையில் அறிவிக்கப்படும். அந்த 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு இந்த கூட்டணியை முன்னெடுத்துச் செல்லும். பிரச்சாரம் உள்ளிட்டவைகள் குறித்து திட்டமிட டெல்லியில் செயலகம் அமைக்கப்படும் என்று கார்கே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டம் எப்போது நடக்கும் என தற்போது தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 26 உறுப்பினர்களைக் கொண்ட INDIA கூட்டணியின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 25-26 தேதிகளில் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.