புதுச்சேரி சிறைத்துறையின் புதிய முயற்சி; பொதுமக்கள் பாராட்டு

கைதிகளின் மனஅழுத்தத்தைப் போக்க, புதிய முயற்சியாக சிறையில் இயற்கை விவசாயம், பண்ணைகள் அமைத்து, ஆடு, மாடு, கோழி வளர்த்தல் போன்ற செயல்களால் புதுச்சேரி சிறைத்துறை பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது. புதுச்சேரி மத்திய சிறையில்…

கைதிகளின் மனஅழுத்தத்தைப் போக்க, புதிய முயற்சியாக சிறையில் இயற்கை விவசாயம், பண்ணைகள் அமைத்து, ஆடு, மாடு, கோழி வளர்த்தல் போன்ற செயல்களால் புதுச்சேரி சிறைத்துறை பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது.

புதுச்சேரி மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை சிறைத்துறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. தன்னார்வ நிறுவனங்கள் மூலம் கைதிகளுக்குத் தொழில் பயிற்சி அளிப்பது, யோகா, நடனப் பயிற்சி மூலம் அவர்களது மன அழுத்தத்தைப் போக்குவது போன்ற திட்டங்கள் புதுச்சேரி சிறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது புதிய முயற்சியாக அரபிந்தோ சொசைட்டியுடன் இணைந்து சிறையில் இயற்கை விவசாயம், பண்ணைகள் அமைத்து, ஆடு, மாடு, கோழி, முயல்கள் வளர்த்தல் போன்ற செயல்களில் கைதிகள் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய சிறை வளாகத்தில் உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர். சிறை வளாகத்தில் நடைபெற்ற விவசாயப் பணிகள் தொடக்க நிகழ்வில், சிறைத்துறை ஐஜி ரவிதீப் சிங் சாகர், அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், எம்எல்ஏ கல்யாணசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

சிறையில் விவசாயம் செய்வது புதுவித அனுபவமாக இருப்பதாகவும், இது மிகப்பெரிய மனமாற்றத்தை உருவாக்குவதாகவும் சிறை கைதிகள் தெரிவிக்கின்றனர். விவசாயப் பணிகளில் ஈடுபடும் கைதிகளுக்கு தினசரி வேலைக்காக ரூ.200 கூலியாக வழங்கப்படுகிறது. சாகுபடி செய்யப்பட்டுள்ள தோட்டப் பயிர்களிலிருந்து விளையும் பொருட்களைப் புதுச்சேரி சந்தையில் விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது, சிறையில் கைதிகளை நல்வழிப்படுத்தவும், தண்டனைக் காலம் முடிந்து அவர்கள் வெளியே சென்ற பிறகு சுயதொழில் செய்து வருவாய் ஈட்டுவதற்கு ஏதுவாக புதுச்சேரி அரசு மற்றும் சிறைத்துறை சார்பாக இதுபோன்ற வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.