விளையாட்டு மற்றும் படிப்பு இரண்டிற்கும் கஷ்டப்படும் வீரர்களுக்கு உதவ நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் புதிய அகாடமியை தொடங்கியுள்ளார்.
இளைஞர்நலன்,விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக தேசிய விளையாட்டு தினம் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் இளைஞர் நலன் &விளையாட்டுத்துறை மெய்யநாதன், இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, பள்ளி கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி
மற்றும் தயாநிதி மாறன் எம்,பி, சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின், பரந்தாமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், நண்பன் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக 150 விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.20 ஆயிரம் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்க உள்ளனர். நண்பன் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் குற்றாலீசுவரன் பேசுகையில், “விளையாட்டு மற்றும் படிப்பு இரண்டிற்கும் சேர்ந்து கஷ்டப்படும் விளையாட்டு வீரர்களுக்கு எங்கள் தொண்டு நிறுவனம் உதவி செய்யும். பலரின் ஆதரவுடன் நண்பன் ஸ்போர்ட்ஸ் அக்காடமியை தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.” என்று கூறினார்.
இதனையடுத்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “இந்த நிகழ்விற்காக விளையாட்டு துறை அமைச்சர் ஒரு வாரம் முன்பு என்னை அழைத்தார். இந்த வருடம் குறைவான நபர்களுக்கு செய்கின்ற உதவி வருகின்ற காலங்களில் பல நபர்களுக்கு போய் சேர வேண்டும். மேடையில் யோகா செய்து காண்பித்த மாணவி சுபாவின் படிப்புச் செலவை நண்பன் அறக்கட்டளையே ஏற்றாலும் கூட நான் தனிப்பட்ட முறையில் அவர்களின் பள்ளி படிப்பை ஏற்றுக்கொள்கிறேன். குற்றாலீசுவரன் எனக்கு பள்ளி காலத்தில் மிகப்பெரிய முன்னுதாரணம். அவர் மூலமாகத் தான் நீச்சல் என்ற விளையாட்டு இருப்பதே தெரியும். அவர் எனது தங்கை உடன் பள்ளியில் படித்த காலம் முதல் நன்கு அறியப்பட்டவர்.” என்று கூறியுள்ளார்.








