இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தோ்வில் ஒரே மதிப்பெண் பெறும் மாணவா்களை தரவரிசைப்படுத்தும் நடைமுறையில், தேசிய மருத்துவ ஆணையம் புதிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி பலா் ஒரே மதிப்பெண் பெறும் நிலையில், இயற்பியல் பாட மதிப்பெண்ணுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை நீட் மதிப்பெண் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது. இதற்கென நீட் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இதில் பல மாணவா்கள் ஒரே மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது. அவ்வாறு ஒரே மதிப்பெண் பெறும் மாணவா்களைத் தரவரிசைப்படுத்த, அவா்களின் உயிரியல் பாட மதிப்பெண் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும். உயிரியல் பாட மதிப்பெண்ணும் ஒரே மாதிரியாக இருக்கும் நிலையில், அவா்களின் வேதியியல் பாட மதிப்பெண்ணும், கடைசியாக இயற்பியல் பாட மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு வரிசைப்படுத்தப்படுவா். இந்த 3 பாட மதிப்பெண்களும் ஒரே மாதிரியாக இருக்கும் மாணவா்களுக்கு, அவா்களின் வயது கருத்தில் கொள்ளப்பட்டு வரிசைப்படுத்தப்படுவா். நடப்பு ஆண்டில் இந்த நடைமுறைப்படியே எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான சோ்க்கை நடைபெற உள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நீட் தேர்வில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே மதிப்பெண் எடுக்கும் பட்சத்தில், இயற்பியல் பாடத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விதிமுறையில் திருத்தம் செய்ய தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளது. ‘இளநிலை மருத்துவக் கல்வி சோ்க்கை வழிகாட்டுதல் – 2023’ என்ற பெயரிலான இந்தப் புதிய வழிகாட்டுதலை கடந்த 2-ஆம் தேதி என்எம்சி அதாவது தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்தது. இதில், எம்பிபிஎஸ் கலந்தாய்வில் முக்கிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் புதிய வழிகாட்டுதல் அடுத்த ஆண்டுமுதல் நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ள புதிய நடைமுறைப்படி, மதிப்பெண் ஒரே மாதிரியாக இருக்கும் மாணவா்களுக்கு முதலில் அவா்களின் இயற்பியல் பாட மதிப்பெண்ணும், பின்னா் வேதியியல் பாட மதிப்பெண்ணும், கடைசியாக உயிரியல் பாட மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்த 3 பாட மதிப்பெண்களும் ஒரே மாதிரியாக இருக்கும் நிலையில், கணினி அடிப்படையிலான குலுக்கல் நடைமுறையில் தரவரிசைப்படுத்தப்பட உள்ளனா். இந்தக் குலுக்கல் நடைமுறையில் எந்தவித மனிதக் குறுக்கீடும் இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையின்படி எம்பிபிஎஸ் படிப்புகளில் சேரும் மாணவ – மாணவிகள் 9 ஆண்டுகளுக்குள் படிப்பை முடித்தாக வேண்டும். அதாவது, படிப்பின் முதலாம் ஆண்டில் தோ்ச்சி பெறுவதற்கு 4 தவணைகள் மட்டுமே வாய்ப்பளிக்கப்படும். ஒட்டுமொத்த படிப்பையும் சோ்க்கை பெற்றது முதல் 9 ஆண்டுகளுக்குள் முடித்தாக வேண்டும். எந்தச் சூழலிலும் இதில் தளா்வு அளிக்கப்படாது என்றும், நாடு முழுவதும் உள்ள 100 சதவீத எம்பிபிஎஸ் இடங்களுக்கும் பொதுக் கலந்தாய்வு நடத்தப்படும் எனவும் தேசிய மருத்துவ ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா









