மு.க. ஸ்டாலின் தலைமையிலான கடந்த திமுக ஆட்சியில் ‘மகளிர் விடியல் பயணத் திட்டம்’ கொண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் பெண்கள் இலவசமாக நகர பேருந்துகளில் பயணம் செய்யலாம். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியிலும் இந்த திட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் ‘மகளிர் விடியல் பயணத் திட்டம்’ என்கிற பெயரை ‘மகளிர் பயணத் திட்டம்’ என தவெக பெயர் மாற்றம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘விடியல்’ என்பது 2021 ஆம் ஆண்டு திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியத்துவம் வகித்தது இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது.
மகளிரின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தின் பெயரை மாற்றுவது, மக்கள் நலனுக்கான நிர்வாக நடவடிக்கை அல்ல; அரசியல் அடையாளங்களை அழிக்கும் முயற்சி மட்டுமே. ஒரு திட்டத்தின் வெற்றியை அதன் பெயர் தீர்மானிக்காது; அது மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய முன்னேற்றம்தான் தீர்மானிக்கும்.
பெயர் மாற்றங்களில் செலவிடும் நேரத்தையும் ஆற்றலையும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் புதிய திட்டங்களிலும், சேவைகளை வலுப்படுத்துவதிலும் செலவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.




