திருச்சி மாவட்டத்தில் மக்களுக்கு நலத்திட்ட பணிகள் செய்து தரமுடியவில்லை என பேரூராட்சி கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே காட்டுப்புத்தூர் பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பத்தாவது வார்டில் ஐஜேகே கட்சியின் சார்பில் கருணாகரன் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் வெற்றி பெற்றால் வார்டு பகுதி மக்களுக்கு
பல்வேறு நல திட்ட உதவிகளை செய்வதாகவும், செய்ய தவறினால் தனது பதவியை இரண்டரை ஆண்டில் ராஜினாமா செய்வதாகவும் கருணாகரன் கூறியுள்ளார். இந்நிலையில் சில திட்ட பணிகள் செய்து முடித்த நிலையில் சமுதாய கூடம், பெண்களுக்கான சுகாதார வளாகம் ஆகியவற்றை கட்டி தர முடியாமல் போகியுள்ளது.
இதனால் தனது பதவியை தேர்தல் பிரச்சாரத்தின் போது கொடுத்த வாக்குறுதியின் படி ராஜினாமா செய்து நிர்வாகத்திற்கு கடிதம் வழங்கினார். இதனால் பேரூராட்சி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.







