திருமண விருப்பத்தை பேரறிவாளன் நிறைவேற்ற வேண்டும் – முத்தரசன்

பேரறிவாளனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதே பெற்றோர்களுடைய விருப்பமாக உள்ளது என தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், பெற்றோர்களின் விருப்பத்தை பேரறிவாளன் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.   ராஜீவ்காந்தி…

பேரறிவாளனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதே பெற்றோர்களுடைய விருப்பமாக உள்ளது என தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், பெற்றோர்களின் விருப்பத்தை பேரறிவாளன் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் இன்றும் விடுதலை வழங்கியுள்ளது. பேரறிவாளனின் தாய் மற்றும் தமிழ்நாடு அரசு, மூத்த வழக்குறைஞர்கள் உட்பட ஏராளமானோர் விடுதலைக்காக போராடி வந்த நிலையில், பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

பேரறிவாளன் விடுதலையை பல்வேறு தலைவர்களும் வரவேற்றுள்ளனர். அந்த வகையில் பேரறிவாளனின் விடுதலை மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் மதுரையில் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், பேரறிவாளன் மீது ராஜீவ்காந்தி கொலை வழக்கிற்கு தொடர்பு உள்ளதாக மட்டுமே குற்றச்சாட்டு இருந்ததாகவும், பேரறிவாளன் தான் கொலை செய்தார் என்பதற்கு எந்தவொரு ஆதாரமுமில்லை என்றும் அவர் கூறினார். 7 பேரை விடுதலை செய்ய மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியதை சுட்டிக்காட்டிய அவர், தீர்மானத்தின் மீது ஆளுநர் உரிய முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தியதாகவும் குற்றம்சாட்டினார்.

 

ஒன்றிய அரசும், ஆளுனரும் 7 பேர் விடுதலையில் கவனம் செலுத்தவில்லை என சாடிய அவர், பேரறிவாளன் விடுதலையை போன்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உள்ள மற்றவர்களும் விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஒன்றிய அரசுக்கும், ஆளுநருக்கும் தகுந்த பாடத்தை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

பேரறிவாளன் இளமை காலத்தை சிறையில் கழித்ததாகவும், பேரறிவாளனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதே பெற்றோர்களுடைய விருப்பமாக உள்ளதாகவும் அவர் கூறினார். எனவே, பெற்றோர்களுடைய விருப்பத்தை பேரறிவாளன் நிறைவேற்ற வேண்டும், மீதமுள்ள காலத்தை மிக மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் என முத்தரசன் கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.