“புரட்சி நாயகன்” சேகுவேரா கதை

“உலகில் எங்கெல்லாம் அநீதி நடக்கிறதோ; அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்!” என்று சொன்னதோடு, அதையே தன் வாழ்நாளின் இறுதிமூச்சு வரை பின்பற்றிய புரட்சியாளர், “எர்னஸ்டோ சே குவேரா”. பொலிவியா மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் உயிர்…

“உலகில் எங்கெல்லாம் அநீதி நடக்கிறதோ; அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்!” என்று சொன்னதோடு, அதையே தன் வாழ்நாளின் இறுதிமூச்சு வரை பின்பற்றிய புரட்சியாளர், “எர்னஸ்டோ சே குவேரா”. பொலிவியா மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீர்த்த உன்னத போராளி. “சே” என்பது, அவரை வெறுத்து ஒதுக்கியவர்களுக்கு வேண்டுமானால் வெற்றுப்பெயராக இருக்கலாம். ஆனால், அந்த பெயரை உச்சரிக்கும் போது, நாடி நரம்பெல்லாம் முறுக்கேறுகிற பல கோடி நபர்களுக்கு அவர் ஒரு மந்திரம். நினைவில் வந்து போனாலே புரட்சி உணர்வை ஊட்டுகிற அந்த மந்திர மனிதனை பற்றியே இன்றைய கதைகளின் கதை.

1967அக்டோபர் 9. அன்றைய தினம் பொலிவியாவின் அடர்ந்த காடுகளுக்கு நடுவே இருந்த ‘லா ஹிகுவேரா’ கிராமத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டிருந்தது. அங்கிருந்த பாழடைந்த பள்ளிக் கட்டடத்திற்கு அமெரிக்க உளவுத் துறையான சிஐஏவின் ஏஜெண்ட் பெலிக்ஸ் ரோட்ரிக்ஸூம், பொலிவியா ராணுவ தளபதி ஸென்டோனாவும் ஹெலிகாப்டரில் வந்திறங்கினர். அவர்களின் எதிரில் ரத்தக்கறை படிந்த, கிழிந்த ராணுவ உடையில் மிகவும் சோர்வான தோற்றத்துடன் கலைந்துபோன தலைமுடியுடன் கைகள் பிணைக்கப்பட்ட நிலையில் கிடந்தார் கியூபாவின் தொழில்துறை அமைச்சராகப் பதவி வகித்த சே குவேரா.

அவர் நினைத்திருந்தால் கியூபாவின் அதிபராகியிருக்க முடியும். ஆனால், லத்தின் அமெரிக்க நாடுகளில், ஏகாதிபத்திய முதலாளித்துவ அரசுகளால் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் பசி பட்டினியால் வாடுவதை தடுக்க, கியூபா புரட்சியை போல், ஒரு புரட்சியை நடத்திவிட தீர்மானித்தார் எர்னஸ்டோ சே குவேரே. இதன் காரணமாகவே, 1966 நவம்பர் 3ம் தேதி அடால்போ மேனா கோன்சாலஸ் எனும் பெயரில் பொலிவியாவுக்கு மாறு வேடத்தில் பயணித்தார். பருமனான உடல், வழுக்கைத் தலை, அடர்ந்த புருவம், கண்ணாடி, கையில் ஒரு சுருட்டு என முற்றிலும் மாறியிருந்ததால், லா பாஸ் விமான நிலையத்தில் அவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பொலிவிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டதும் புரட்சிக்காக வீரர்களை தயார்படுத்தும் பணிகள் வேகமெடுத்துவிட்டன. காட்டில் பதுங்கி பதுங்கியே பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இடையிடையே எதிரணியினரை குறிவைத்து தாக்குதல் வேறு நடந்து கொண்டிருந்தது.. கொரில்லா படை வீரர்கள் 47 பேருடன் நான்காஹூவாசு ((ñancahuazú region)) பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென கியூபாவுடனான ரேடியோ தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் கையில் இருந்த உணவுபோருட்களும் குறைய ஆரம்பித்தது. இதற்கிடையே, சேவின் குழுவில் இருந்த வீரர்கள், பிளேக் நோய் மற்றும் கொடிய காட்டுப் பூச்சிகளின் கடியால் பாதிக்கப்பட்டனர். இப்படிப்பட்ட சூழலில் தான் அமெரிக்க படை அந்த இடத்தில் முகாமிட்டது.

“அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்த பிறகு, நாம் என்ன வேடிக்கைப் பார்க்கவா வந்தோம்” எதிர் தாக்குதலில் ஈடுபட்டது சேவின் குழு. ஆனால், அவரது குழுவில் இருந்த பலர் குண்டடிப்பட்டு உயிரிழந்தனர். தப்பி பிழைத்தவர்கள் அருகேயிருந்த மலைக்காடுகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த தலைமறைவு 2 மாதங்களுக்கு மேல் நீடித்தது. அதேநேரம் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருந்த சேவின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. இதன்பிறகே “லா ஹிகுவேரா” பகுதியில் இருந்த யூரோ கணவாயை எஞ்சியிருந்த 8 வீரர்களுடன் கடந்தார் சே. செல்லும் வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு அவர் கொடுத்த 50 பேஸோக்களுக்கு கை மாறாக சேவின் இருப்பிடத்தை பொலிவிய ராணுவத்துக்கு காட்டிக்கொடுத்தார் அந்த பெண்.

கண்மூடி யோசிப்பதற்கெல்லாம் நேரம் கிடையாது. லா ஹிகுவேரா பகுதிக்குள் நுழைந்த சிஐஏ வீரர்கள், சேவின் இருப்பிடத்தை சுற்றி வளைத்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். “நான்தான் சேகுவேரா, என்னை நீங்கள் துப்பாக்கியால் சுடுவதைக் காட்டிலும், உயிருடன் பிடிப்பது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்” என்றார் சே. அவரை கைது செய்த “கேரி பிராடோ” அருகில் இருந்த பழைய பள்ளி கட்டடத்தில் சேகுவேராவையும் அவரின் தோழர்களையும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தனித்தனி அறையில் அடைத்தனர். மிகவும் சோர்வாகவும், அழுக்காகவும் இருந்ததாலும் தெளிவுடன் பேசினார் ‘சே’. “என்னை என்ன செய்ய போகிறீர்கள்?”. “உங்களை ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் செல்ல இருக்கிறோம்” என்றார் கேரி பிராடோ. உண்மையில் ஆச்சர்யம் அடைந்தார் சே. நீதிமன்ற விசாரணையில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்று சேர்வதற்கான அவசியத்தை எடுத்துரைக்க முடியும் என நம்பினார் சே. ஆனால் அவர் நினைத்த எதுவும் நடக்கவில்லை.

சே பிடிபட்டவுடன் சிஐஏ தலைமையகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஓராண்டு தேடலுக்குப் பிறகு கையில் கிடைத்த “சே”வை பொலிவியா ராணுவத்தினர் சித்திரவதைக்கு உள்ளாக்கினர். இப்படிப்பட்ட சூழலிலும் தனக்கு உணவளிக்க வந்த பெண்ணிடம், “இது என்ன இடம்..? என்று கேட்க, பள்ளிக்கூடம் என பதில் அளித்துள்ளார் அந்த பெண். பள்ளிக்கூடமா? ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது? என வருத்தப்பட்டுள்ளார் ‘சே”. சாவின் விளிம்பிலும் சேகுவேராவின் இதயம் ஏழைகளுக்காகக் கவலைப்படுவதை எண்ணி அந்த பெண் வியந்தார். அதேநேரம் சே உயிருடன் இருக்கும்போதே அவர் இறந்துவிட்டதாகப் பொய்யான தகவல் பொலிவியா முழுவதும் பரப்பப்பட்டது.

இதற்குள் அந்த பள்ளிக்கூட வளாகத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய சிஐஏ ஏஜெண்ட் பெலிக்ஸ் ரோட்ரிக்ஸூம், பொலிவியா ராணுவ தளபதி ஸென்டோனாவும், தங்கள் கையில் இருந்த கேமராவால் சேகுவேராவை படம் பிடித்தனர். அத்துடன், “மணமகனுக்கு வழிவிடுங்கள் அவரை புகைப்படம் எடுக்கவேண்டும்” என கேலி செய்தனர். ஆனால், இதைக்கேட்டு சேகுவேரா சிரிக்கத்தான் செய்தார். சேவிடம் இருந்த டயரியை பரிசோதனை செய்த ராணுவத்தினர், அவர்தான் சேகுவேரா என்பதை உறுதிப்படுத்தி கொண்டனர். “சேகுவேராவை உயிருடன் பிடித்து விட்டோம். இப்போது, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” உடனடியாக சிஐஏ தலைமையகத்துக்கு தகவல் பறந்தது. “அவரை கொன்று விடுங்கள்” என்றே பதில் வந்தது. அதற்கு, ரகசிய குறியீட்டையும் பொலிவியா ராணுவத்தினர் பயன்படுத்தினர். அதாவது 500 என்றால் சேகுவேரா என்றும் 600 என்றால் சேவை கொல்லவேண்டும் என்றும் 700 என்றால் சேவை உயிருடன் வைத்திருக்கவேண்டும் என சங்கேத குறியீடு கொடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், சிஐஏவின் ஏஜெண்ட் பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ்க்கு வந்த ராணுவ ரேடியோ அழைப்பில் 500, 600 எனும் எண்கள் மீண்டும் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது. சேகுவேராவை கொல்வதற்காக உத்தரவு கிடைத்த உடனே, யார் சேவை கொல்வது என அவர்களுக்குள்ளாகவே போட்டி போட்டுக்கொண்டிருந்தனர். 27 வயதே நிரம்பிய ராணுவ வீரர் மரியோ டெரான் “சேவை நான் கொல்கிறேன்” என முன்வந்தார். முதலாளித்துவ நாடுகளையெல்லாம் அலறவிட்ட சேகுவேராவை நான் கொல்லப்போகிறேன் என்ற கர்வத்தைவிட, சேவை பார்த்ததும் மரியோ டெரானுக்கு தலை சுற்றியது. ஜெலித்துக் கொண்டிருந்த சேவின் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தவித்தார். சேகுவேரா, அவரை நோக்கி வருவது போல தோன்றியது. மிரண்டு போனார் மரியோ டெரான். ஆனால்,

“நிதானமாக இரு…, நேராக என்னை நோக்கி குறி வை…., நீ சேகுவேராவை கொல்வதாக நினைத்துக்கொள்ளாதே…., ஒரு சாதாரண மனிதனைக் கொல்வதாக நினைத்துக்கொண்டு, என்னைச் சுடு” என்றார் சேகுவேரா. அவர் சொன்னபடியே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு சேவை நோக்கி சுட்டாலும் அவர் சுட்ட முதல் குண்டு சேகுவேராவை தொட்டுக்கூட பார்க்கவில்லை. அதன்பிறகு மரியோ டெரான் சரமாரியாக சுட்டதில் சேவின் நெஞ்சிலும், கை மற்றும் கால்களிலும் குண்டுகள் துளைத்தது. அவரது உடல் எங்கும் ரத்தம் பீய்ச்சி அடித்தது. எளிய மக்களுக்கும் அதிகாரம் வேண்டும் என்று கொப்புளித்துக் கொண்டிருந்த சேகுவேராவின் ரத்தத்தின் சூடு மெல்ல மெல்ல அடங்கத் தொடங்கியது.

உடலை அப்புறப்படுத்தும் பணிகள் தொடங்கியது. சிஐஏ அதிகாரிகள் வந்த ஹெலிகாப்டரின் ஸ்டாண்ட் பகுதியில், சேவின் உடலை கட்டி பொலிவியாவில் உள்ள வல்லே கிரானடா மருத்துவமனைக்கு கொண்டு சென்று வைத்தனர். ரத்தம் தோய்ந்த சேகுவேராவின் உடலைச் சுத்தம் செய்ய வந்த செவிலியர் சுசானா ஒசினகா, மரணித்தும் கண்களில் ஒளியுடன் இருந்த சேகுவேராவின் சடலத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். பொலிவியாவின் ஒவ்வொரு ஏழைக்கும் அந்த நாட்டின் பணக்காரர்களுக்கு கிடைக்கும் வாழ்க்கை கிடைக்க வேண்டும் என போராடிய சே, அந்த தருணத்தில் அந்த செவிலியருக்கு புனிதராக தென்பட்டார். சிலுவையில் ஏற்றப்படுவதற்கு முன்பு இயேசு கிறிஸ்துவின் உடல், எப்படி முழுவதும் ரத்த தோய்ந்து, தலைமுடியெல்லாம் களைந்து மெலிந்த தேகத்துடன் உருவகப்படுத்தப்படுகிறாரோ, அதேபோல் சேவும் இருக்கிறார் என நினைத்துக் கொண்டார்.

செவிலியர் சுசானா ஒசினகாவின் கூற்றை போலவே, பொலிவியாவின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்கள், சேகுவேராவை புனிதர் எர்னாஸ்டோ என்றுதான் அழைக்கின்றனர். மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சேவின் உடலைப் பார்க்க வந்த மக்கள் கதறி அழுதனர். இதன்பின்னர் பொலிவியா ராணுவத்தினர் சேவின் இரண்டு கைகளையும் மணிகட்டு பகுதிவரை வெட்டி எடுத்தனர். ஏனென்றால் அவர்கள் கொன்றது சேகுவேரா தான் என்பதை நிரூபிக்க இதைவிட வேறு ஆதாரம் இருக்க முடியாது என்று நினைத்தனர். பின்னர் சேவும் அவருடைய தோழர்களின் உடல்களும் ஒன்றாக ‘வல்லே கிராண்டேவில் ரகசியமான இடத்தில் புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சேகுவேரா இறந்துவிட்டார் என கியூபாவுக்கு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் 12ம் தேதி சேகுவேராவின் சகோதரர் ராபர்டோ “வல்லே கிராண்டே’ பகுதிக்கு வந்து தனது சகோதரரின் உடலைத் தரும்படி ராணுவ அதிகாரிகளிடம் கேட்டார். ஆனால் சேவை எரித்துவிட்டதாக ஓவன்டோ என்ற அதிகாரி பதில் அளித்துள்ளார். சேவின் சாம்பலையாவது தரும்படி கியூப அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் சேவின் சாம்பல் யாருக்கும் தெரியாத இடத்தில் புதைக்கப்பட்டதாக பொலிவிய அதிபர் பாரியண்டாஸ் தெரிவித்தார். சேகுவேரா கொல்லப்பட்டதை நேரடியாகச் சென்று உறுதி செய்த பிறகுதான் அக்டோபர் 18ம் தேதி ஹவானாவின் புரட்சிகர சதுக்கத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டிருந்த அஞ்சலிக் கூட்டத்தின் முன்பு கனத்த இதயத்துடன் தோன்றினார் அதிபராக இருந்த பிடல் காஸ்ட்ரோ. அந்த கூட்டத்தின் நடுவே பேசிய ஃபிடல், “உலக மக்களின் விடுதலைக்கான எல்லைகளைக் கடந்து பயணித்த சேகுவேராவின் வாழ்க்கை, வரலாறு மேன்மை பொருந்திய பக்கமாகிவிட்டது. கொரில்லா யுத்தத்தின் சிறப்பு வாய்ந்த கலைஞனான சே, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அவரின் வாழ்நாள் போராட்டம் எதிர்கால சந்ததியினருக்கு முன்மாதிரியாக இருக்கும்” என்றார்.

ஃபிடலின் பேச்சை கேட்ட, ஒட்டு மொத்த கியூபாவும் சோகத்தில் மூழ்கியது. அதே நேரத்தில் சேகுவேரா புதைக்கப்பட்ட இடத்தை தேடிக் கண்டுபிடிப்பதில் தனிக் கவனம் செலுத்தியது கியூபா அரசு. கிட்டதட்ட 30 ஆண்டுகள் பொலிவியாவின் சுடு மணல்களால் அரிக்கப்பட்ட சேவின் எலும்புக் கூடுகளை, பலகட்ட தேடல்களுக்கு பிறகு கண்டுபிடித்ததும், உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியதும், எர்னஸ்டோ சேகுவேரா எனும் புரட்சியாளனை மக்கள் மனதில் மீண்டும் உயிர்த்தெழச் செய்த தருணமாக மாறியது.

சேகுவேரா உடலைக் கண்டுபிடிக்க கியூபா மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக, பொலிவியாவின் தென்மேற்கே 150 மைல் தொலைவில் உள்ள வல்லே கிராண்டே விமான ஓடு தளத்தின் கீழே உடல்கள் புதைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த கியூபா மற்றும் அர்ஜண்டினா அதிகாரிகள், அங்கிருந்த உடல்களை கைப்பற்றி சோதனை செய்தனர். குறிப்பாக, கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த எலும்புக்கூட்டினை ஆய்வுக்குட்படுத்தியதில், அது சேகுவேராவின் உடல்தான் என்று உறுதி செய்யப்பட்டது. எலும்புக்கூட்டின் பல் வரிசையில் ஒன்று செயற்கையானது என்றும், அது கியூபாவில் செய்யப்பட்ட செயற்கை பல் என்பது கண்டுபிடிக்கப்பட்டதால், அது சேவின் எலும்புக்கூடுதான் என்ற முடிவுக்கு வந்தனர் அதிகாரிகள். மற்ற 6 பேரின் உடல்களும் தோண்டி எடுக்கப்பட்டன.

சேகுவாராவை கொன்று புதைத்தாலும் அவர் என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்திருப்பார் என்பதற்கு சாட்சியாக அமைந்தது 1997 அக்டோபர் 17. அன்றைய தினம், சேகுவேராவின் உடல் கியூபாவுக்கு கொண்டுவரப்பட்டபோது உலகமே கண்ணீர்வடித்தது. சிறு பேழையில் வைக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட சேவின் எலும்புக் கூட்டைக் காண வீதிகளில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். முழு அரசு மரியாதையுடன் சாந்தா கிளாரா உள்ள அருங்காட்சியம் அருகே அடக்கம் செய்யப்பட்டது சேவின் எச்சங்கள்.

-ரேணுகா தேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.