குயிண்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்யக் கூறி, இந்து சமய
அறநிலையத் துறை சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், பாப்பான்சத்திரத்தில் அமைந்துள்ள குயிண்ஸ்லேண்ட்
பொழுதுபோக்கு பூங்கா, காசி விஷ்வநாதர் திருக்கோயில் மற்றும்
வேணு கோபாலேஷ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில்
அமைந்துள்ளதாகக் கூறி, பூங்கவை காலி செய்யுமாறு இந்து சமய அறநிலையத் துறை
சார்பில் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனை எதிர்த்து குயிண்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த மனுவில், குயிண்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா அமைந்திருக்கும் நிலம், கோவில்களுக்குச் சொந்தமான நிலம் அல்ல என தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த நிலம், வருவாய்த் துறைக்குச் சொந்தமானதா, அறநிலைய துறைக்குச் சொந்தமானதா என்பது தொடர்பான விவகாரம், நில நிர்வாக ஆணையரிடம் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேலுமணி, நில உரிமை தொடர்பான விவகாரம்
நில நிர்வாக ஆணையரிடம் நிலுவையில் இருப்பதாகக் கூறி, குயிண்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்ய வேண்டும் என்ற இந்து சமய
அறநிலையத் துறையின் நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
-ம.பவித்ரா







