கன்னியாகுமரியில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த தந்தை அடிக்கும் என பயந்து ரப்பர் தோட்டத்திற்குள் ஓடிய 4 வயது சிறுமியை விஷப்பாம்பு கடித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் குட்டைக்குழியை அடுத்த குட்டைக்காடு பாலவிளையை சேர்ந்தவர் சுரேந்திரன். கூலி தொழிலாளியான இவருகு சிஜிமோள் என்ற மனைவியும், சுஷ்வகா மோள் என்ற 4 வயது மகளும், சுஜிலின் ஜோ என்ற 9 வயது மகளும், சுஷ்வின்சி ஜோ என்ற 12 வயது மகளும் உள்ளனர்.
மதுபோதைக்கு அடிமையான சுரேந்திரன் தினமும் குடித்து விட்டு வந்து மனைவி மற்றும் மகள்களை அடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவும் வழக்கம் போல் மதுகுடித்து வந்த சுரேந்திரன் மனைவியிடம் தகராறு செய்துள்ளதார். அப்போது, தந்தை தங்களை அடிக்க போவதாக பயந்த குழந்தைகள் வீட்டிற்கு அருகில் இருந்த ரப்பர் தோட்டத்திற்குள் ஓடிசென்றனர். அங்கு, எதிர்பாராத விதமாக சுஷ்வகா மோளை விஷப்பாம்பு கடித்துள்ளது. இதனால் சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு ஆசாரிபாள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுஷ்வகா மோள் உயிரிழந்தார். இது தொடர்பாக தகவலறிந்து சென்ற திருவட்டார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுபோதையில் தாம் என்ன செய்கிறோம் என தெரியாத தந்தையின் செயலால் பரிதாபமாக சிறுமியின் உயிர் பிரிந்து விட்டதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
– இரா.நம்பிராஜன்








