44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கடைசி வீரரான நைஜரீயா நாட்டு பெண் வீரரை சென்னை போலீசார் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28ந் தேதி முதல் ஆகஸ்ட் 9ந் தேதி வரை தமிழ்நாடு அரசு நடத்திய 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளில் இருந்து 2200க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். செஸ் போட்டி நிறைவு பெற்றதும் வீரர்கள் தங்களது நாட்டிற்கு புறப்பட்டனர். இந்நிலையில் தமிழகத்தை விட்டு தங்கள் நாட்டிற்கு செல்லும் கடைசி சர்வதேச வீராங்கனையான நைஜீரியாவைச் சேர்ந்த டோரிட் செமுவா ஒபோவினோவை வழியனுப்ப தமிழ்நாடு காவல்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் டோரிட் செமுவா ஒபோவினோவை செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுனா சிங் தலைமையில் போலீசார் வழியனுப்பி வந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டோரிட் செமுவா ஒபோவினோ , “செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள தமிழ்நாடு வந்தேன். இந்த போட்டிக்கான பாதுகாப்பு வேலைகளில் தமிழக போலீசார் மிகவும் சிறப்பாக பணியாற்றினார்கள். உடல் நல குறைவினால் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட போது டாக்டர்கள் நன்றாக கவனித்து கொண்டனர். தமிழ்நாட்டிற்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுனா சிங், “செஸ் ஒலிம்பியாட்டில் கலந்து கொண்ட வீரர்களில் கடைசி வீரரை வழி அனுப்ப உள்ளோம். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட வீரர் பாதுகாப்பாக அவரது நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார். செஸ் ஒலிம்பியாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சிறப்பாக பணியாற்றி உள்ளனர்” என்றார்
“உலகிலேயே முதன் முறையாக 225 வீரர்கள் போலீசாரின் பணியை பாராட்டி கடிதம் எழுதி உள்ளனர். எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை. வெளிநாட்டு வீரர்கள் ஆட்டோ, டாக்சிகளிலும் பயணம் செய்துள்ளனர். அப்போது அவர்கள் எந்தவித இடையூறுகளையும் சந்திக்கவில்லை. தமிழகம் பாதுகாப்பான மாநிலம் என்பது உணர்த்தப்பட்டு உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வீரர்கள் தங்கி இருந்த இடங்களில் யாருக்கும் போதை பொருள் கிடைக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. போதை பொருள் இல்லாத பகுதியாக தமிழ்நாடு மாற்றப்பட்டு உள்ளது. மேலும் குற்றம் இல்லா தமிழகமாகவும் மாற்றப்பட்டு உள்ளது, இனி வரும் காலங்களிலும் இதே நிலை தொடரும்” என்று செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. சுகுனா சிங் தெரிவித்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 4 ஆயிரம் போலீசார் 15 நாட்கள் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்று கூறிய சுகுனா சிங், சர்வதேச விளையாட்டுத் தொடரை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவை நிறைவேற்ற போலீசாரும் தங்கள் பங்கை சிறப்பாக ஆற்றியுள்ளனர் என்றார்.







