தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமான சம்பா சாகுபடியைக் காப்பாற்ற வேண்டிய மிக முக்கியமான இக்காலகட்டத்தில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) பிறப்பித்துள்ள உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய உரிய தண்ணீரைத் தடையின்றித் திறக்க வேண்டிய சட்டப்பூர்வ கடமை கர்நாடக அரசுக்கு உண்டு.
காவிரி ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நாள்தோறும் 3,000 கனஅடி வீதம் நவம்பர் 6ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவிட்டிருந்தும், பிலிகுண்டுலுவில் தொடக்க நாட்களில் ஏற்பட்ட 3,851 கனஅடி பற்றாக்குறை டெல்டா விவசாயிகளிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஜூலை மத்தியில் தொடங்க வேண்டிய நீண்டகால சம்பா சாகுபடி, மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் செப்டம்பர் முதல் வாரத்தில் தான் தாமதமாகத் தொடங்கப்பட்டது. தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருந்தாலும், பயிர்களைக் காப்பாற்றி மகசூலை ஈட்ட காவிரி நீர் தொடர்ந்து தேவைப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளையும், சட்டப்பூர்வ அமைப்பான காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் அனைத்துத் தரப்பினரும் முழுமையாக மதித்துச் செயல்பட வேண்டும். பற்றாக்குறை நிலவும் காலங்களிலும் சரிவிகித அடிப்படையில் உரிய பங்கீட்டை உறுதி செய்ய வேண்டியது கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படை நெறியாகும்.
எனவே, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவின் நியாயத்தை உணர்ந்து, ஆணையத்தின் உத்தரவுப்படி பிலிகுண்டுலுவில் நிலுவையில் உள்ள பற்றாக்குறை நீரை ஈடுசெய்து, தினசரி 3,000 கனஅடி நீரை முழுமையாகத் திறந்துவிட கர்நாடக அரசு உடனடியாக முன்வர வேண்டும். தமிழக டெல்டா விவசாயிகளின் வாழ்வுரிமையையும் வேளாண்மையையும் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் உறுதி செய்யப்பட வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




