உபரி நீரை தேக்கவே கர்நாடக அரசு மேகதாது அணை திட்டத்தை கொண்டு வந்துள்ளது! – அமைச்சர் ப்ரியங்க் கார்கே

உபரி நீரை தேக்கவே கர்நாடக அரசு மேகதாது அணை திட்டத்தை கொண்டு வந்துள்ளது என அம்மாநில அமைச்சர் ப்ரியங்க் கார்கே கூறியிருப்பது காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காவிரியின் குறுக்கே…

உபரி நீரை தேக்கவே கர்நாடக அரசு மேகதாது அணை திட்டத்தை கொண்டு வந்துள்ளது என அம்மாநில அமைச்சர் ப்ரியங்க் கார்கே கூறியிருப்பது காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தண்ணீர் வரத்து பாதிக்கப்படும் என்பதால் மேகதாது அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஆனாலும் அதற்கான நடவடிக்கைகளில் கர்நாடகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

கர்நாடக மாநில துணை முதலமைச்சர் D.K. சிவக்குமார், மத்திய நீர்வழித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கடந்த ஜூன் 20 ஆம் தேதி அன்று கடிதம் ஒன்றை எழுதினார்.

அக்கடிதத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாகவும், தமிழ் நாட்டில் இரண்டாம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு குடிநீர் திட்டங்கள் சட்டவிரோதமாக செயல்படுத்தப்படுவதாகவும், அத்திட்டங்களை நியாயப்படுத்தும் தமிழ் நாடு அரசு, மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு மட்டும் அனுமதி அளிக்காமல் எதிர்ப்பு தெரிவிக்கும் இரட்டை நிலையை எடுத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகனும், கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனாவும் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை நேரில் சந்தித்து இவ்விவகாரம் குறித்து பேசினர்.

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, மேகதாது அணை எதிர்ப்பு , காவிரி நீர் திறப்பு , பெண்ணையாறு நதி நீர் பங்கீடு தீர்ப்பாயம் உள்ளிட்ட விவகாரங்களில் அமைச்சர் துரைமுருகன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். மேலும் இது தொடர்பான கோரிக்கை மனுவையும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம், அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

இந்நிலையில், கர்நாடகாவில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில அமைச்சர் ப்ரியங்க் கார்கே, கடலுக்கு செல்லும் உபரி நீரை பெங்களூரு மாநகர நீர் தேவைக்காகவும், சுற்றுவட்டார சில கிராமங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் மேகதாது அணை திட்டம் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார். யாருடைய ஒதுக்கீட்டு நீரையும் தடுப்பதற்காக மேகதாது அணை திட்டம் கொண்டுவரப்படவில்லை எனக்கூறிய அவர், காவிரி நீரை வழங்க மறுப்பதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்படவில்லை என்பதை தமிழ்நாடு அரசு புரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.