உத்தரப்பிதேசத்தில் ஆசிரியையே மாணவர்களை கொண்டு சக மாணவனை அடிக்க வைத்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட சிறுவன் பள்ளிச் செல்ல பயப்படுவதாக தந்தை தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த குப்பாபூர் கிராமத்தில் நேஹா பப்ளிக் பள்ளி உள்ளது. இங்கு 2-ம் வகுப்பில் படிக்கும் இஸ்லாமிய மாணவர் ஒருவரை மாற்று மதத்தை சேர்ந்த மாணவர்களை அழைத்து அடிக்குமாறு ஆசிரியையும் பள்ளி முதல்வருமான திரிப்தா தியாகி என்பவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெளியான வீடியோவில், பள்ளி ஆசிரியை ஒரு சிறுவனை வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களைக் கொண்டு அடிப்பதை பார்க்க முடிகிறது. அந்த 7 வயது மாணவரால் சரியாக பாடம் வாசிக்க முடியவில்லை. இதனால் கோபமடைந்த ஆசிரியை சக மாணவர்களைக் கொண்டு அந்த மாணவரை அடிக்க சொல்கிறார். இது மட்டுமின்றி மாணவனின் மதம் குறித்தும் ஆசிரியர் கருத்து தெரிவிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து முசாபர்நகர் காவல்துறை, ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து, நாடு முழுவதும் எதிர்வினைகள் வரத் தொடங்கின. இதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆசிரியையும் பள்ளி முதல்வருமான திரிப்தா தியாகி, வைரலாக மாற்றப்பட்ட வீடியோ எடிட் செய்யப்பட்டு வெட்டப்பட்டது, எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. எங்கள் இடத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருக்கிறோம், எங்கள் பள்ளியில் அதிக முஸ்லிம் மாணவர்கள் இருக்கிறார்கள். கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று குழந்தையின் பெற்றோரிடம் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.
நான் ஊனமுற்ற நிலையில் இருப்பதால் எழுந்திருக்க முடியாது. கடந்த 2 மாதங்களாக அவர் வீட்டுப்பாடம் செய்யவில்லை. அதனால் 3 மாணவர்களை அடிக்கச் செய்தேன். நான் தவறு செய்து விட்டேன், கைகளைக் கூப்பி மன்னிப்புக் கேட்கிறேன். இவ்வாறு அந்த ஆசிரியை விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள, மாணவனின் தந்தை, என் மகனுக்கு ஏழு வயது. இச்சம்பவம் ஆகஸ்ட் 24ம் தேதி நடந்தது. ஆசிரியை மாணவர்களை கொண்டு மீண்டும் மீண்டும் என் குழந்தையை அடிக்க வைத்திருக்கிறார். சில வேலைகளுக்காக பள்ளிக்குச் சென்றிருந்த எனது உறவினர் வீடியோவை எடுத்தார். இது இந்து-முஸ்லிம் விவகாரம் அல்ல. சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
எனது குழந்தையிடம் கண்டிப்பாக இருக்குமாறு ஆசிரியரிடம் கேட்டிருந்தேன். ஆனால் மற்ற மாணவர்களை கொண்டு அடிக்க வைப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. தனது ஏழு வயது குழந்தை இரண்டு மணிநேரம் சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறான். பள்ளி செல்லவே பயப்படுகிறான் இவ்வாறு மாணவனின் தந்தை கூறினார்.







