நாகாலாந்தில் அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாகாலாந்து மாநிலம், மோன் மாவட்டத்தில் உள்ள ஒடிங் மற்றும் திரு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுரங்க தொழிலாளர்கள் பணி முடித்து விட்டு, வேனில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகள் எனக்கருதி பொதுமக்கள் சென்ற வாகனம் மீது தவறுதலாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் 13 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து மோன் மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பாதுகாப்பு படை வாகனங்களை தீவைத்து எரித்தனர். மேலும், அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தடை உத்தரவு பிறப்பித்து, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், காயமடைந்த 4 பேரின் சிகிச்சை செலவையும் அரசே ஏற்கும் என அறிவித்துள்ளது. ராணுவ துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக காவல்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.








