தண்டவாளத்தில் லாரி டயரை வைத்த விவகாரம்: 3 பேரை கைது செய்து விசாரணை!

திருச்சி லால்குடி அருகே மேல வாளாடியில் ஜூன் 2-ஆம் தேதி அதிகாலை ரயில் தண்டவாளத்தில் லாரி டயர்களை வைத்த விவகாரத்தில் தனிப்படை போலீசார் மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜூன்…

திருச்சி லால்குடி அருகே மேல வாளாடியில் ஜூன் 2-ஆம் தேதி அதிகாலை ரயில் தண்டவாளத்தில் லாரி டயர்களை வைத்த விவகாரத்தில் தனிப்படை போலீசார் மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜூன் 2 ம்தேதி இரவு கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் மேல வாளாடி ரயில் நிலையம் அருகே சென்றபோது திடிரென பழுதாகி நின்றது. தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது ரயிலின் சக்கரத்தில் லாரி டயர்கள் சிக்கி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் விருத்தாச்சலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து அங்கு வந்த ரயில்வே போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் திருச்சி மண்டல ரயில்வே எஸ்.பி செந்தில் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மேல வாளாடியில் ரயில் தண்டவாளத்தில் மர்ம நபர்கள் டயர்களை வைத்த விவகாரம் குறித்து திருச்சி ரயில்வே டி.எஸ்.பி தலைமையில் 3 தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் மேல வாளாடியை சேர்ந்த வெங்கடேசன், பிரபாகரன்,கார்த்திக் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக கூறினார்.

அதோடு இவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சுரங்க பாலம் சரியான இடத்தில் கட்டவில்லை, முறையாக சாலை வசதி இல்லை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அரசின் கவனத்தை ஈர்க்க இவ்வாறு செய்ததாக கூறியுள்ளனர்.

ரயில் போக்குவரத்து என்பது வெகுஜன மக்கள் அதிகம் பயன்படுத்த கூடியது, எனவே மக்கள் கெட்ட எண்ணத்துடன் செயல்பட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த எஸ்.பி செந்தில் குமார், ரயிலை கவிழ்க்க திட்டம் என்கிற அடிப்படையில் இந்த மூன்று பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.