தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் பயணம் செய்த விமானத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டதாக தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி சோபியா மீது தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்த்த லூயிஸ் சோபியா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் மனுவில் கூறியிந்ததாவது:
2018-ம் ஆண்டு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணித்தேன். அந்த விமானத்தில் அப்போதைய தமிழக பாரதிய ஜனதாவின் தலைவரும், தற்போதைய புதுச்சேரி, தெலங்கானா ஆளுநருமான தமிழிசையும் பயணம் செய்தார். விமானத்தில் இருந்து இறங்கும் போது மத்திய அரசை விமர்சித்து நான் கோஷம் எழுப்பினேன்.
இதையடுத்து கோபமடைந்த தமிழிசை, என்னை மிரட்டும் நோக்கில் திட்டினார். அவரது ஆதரவாளர்களும் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். இதுதொடர்பான புகாரின்பேரில் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.
இதனிடையே சோபியா மீதான வழக்கில் புகார்தாரரான தமிழிசை, தற்போது ஆளுநராக
பதவி வகித்து வருவதால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக
தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் எதிர் மனுதாரராகச் சேர்க்கப்பட்டார்.
மேலும் இந்த வழக்கில் தற்போதைய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு மனு தாரராக உள்ளார். இந்த வழக்கு நீதிபதி தனபால் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்பு நிதி இந்த
வழக்கில் தூத்துக்குடி போலீசார் சென்னை மாநகர போலீஸ் பயன்படுத்தக்கூடிய சட்ட
பிரிவினை பயன்படுத்தி உள்ளனர். இது சென்னை, கோவை, மதுரை காவல்துறையினர் மட்டுமே பயன்படுத்த முடியும். தூத்துக்குடி போலீசார் இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்கு
பதிவு செய்ய முடியாது. அதற்கான அதிகாரம் இல்லை என வாதிட்டார். இதனை பதிவு செய்த நீதிபதி தனபால், சோபியா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.







