அமைச்சர் செந்தில் பாலாஜியை பாஜகவில் இணையச் சொன்னதாக அமலாக்கத்துறை சொன்னதாக வழக்கறிஞர் கபில் சிபல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நிலையில் இதற்கு அமலாக்கத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி மனுவை விசாரித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்தார். ”செந்தில் பாலாஜி மீது கூறப்பட்டுள்ள சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகள் முன்பானது
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த ஒன்பது ஆண்டுகளில் வருமான வரியை தாக்கல் செய்துள்ளேன். சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்திருந்தால் வருமான வரி செலுத்தியது எப்படி ஏற்கப்பட்டிருக்கும்?. வழக்கு பதியப்பட்ட ஆண்டிலிருந்து தற்போது வரை வருமான வரி செலுத்தியது வருமான வரித்துறையால் ஏற்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக பண பரிமாற்றம் நடந்ததாக எந்த சாட்சிகளும் கூறவில்லை.
செந்தில் பாலாஜியின் வழக்கில் மற்ற யாரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்க கூடவில்லை. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என விசாரணையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது.
ஒருவர் மீது வழக்குப்பதிவு செயப்பட்ட பின்னர் அவர் குற்றம் செய்தாரா? இல்லையா என்பதை விசாரணை அமைப்பு தான் நிரூபிக்க வேண்டும். வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் தற்போது அமலாக்கத்துறையிடம் உள்ள நிலையில் என்னால் சாட்சிகளை கலைக்க முடியாது. இலாகா இல்லாத அமைச்சராக தாம் இருக்கும் நிலையில் எங்கும் தப்பி செல்ல இயலாது “ என தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.
கபில் சிபலின் வாதத்திற்கு அமலாக்கத்துறை தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் தெரிவித்துள்ளதாவது..
” நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டது என கபில் சிபல் சொல்லியதற்கு உடனடியாக நீதிமன்றத்திலேயே அமலாக்கத்துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இது அப்பட்டமான பொய். அவ்வாறு எந்த சமயத்திலும் யாரும் கேட்கவில்லை. செந்தில் பாலாஜியிடம் அவ்வாறு சொல்லியிருக்க வாய்ப்பில்லை. பிணை வேண்டும் என்பதற்காக, வேறு வலுவான வாதங்கள் இல்லாததனால் இந்த பொய்யை செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள் முன்னெடுக்கிறார்கள்.” என மறுப்பு தெரிவித்துள்ளார்.
–