தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானாவிலும் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமல்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் தமிழ்நாடு அரசால் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருக்குவளையில் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாள் அன்று மதுரை ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தேன். தற்போது அதை அனைத்து பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்துள்ளோம். சுமார் 17 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள் என்றார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் குறித்து அறிந்துகொள்வதற்காக தெலங்கானா அதிகாரிகள் குழு கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி சென்னை வந்தது.
அந்த குழுவில் தெலங்கானா முதலமைச்சரின் தனிச்செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் இடம் பெற்றனர். சென்னை ராயபுரம் அரசுப்பள்ளி உணவுக் கூடத்தில், காலை உணவு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது, என்னென்ன உணவுகள் தயாரிக்கப்படுகின்றன, எவ்வாறு பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது என்பதை கேட்டறிந்தனர்.
காலை உணவுத் திட்ட சிறப்பு அதிகாரியான இளம்பகவத், காலை உணவுத் திட்டம் குறித்து தெலங்கானா அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், தெலங்கானாவிலும் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன் படி வரும் அக்டோபர் 24-ஆம் தேதி முதல் அம்மாநில பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தொடங்க அம்மாநில அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் தமிழ்நாடு அரசின் திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதியாகி அம்மாநில மாணவர்களையும் பயனடைய வைத்துள்ளது.