மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பையை வென்று இந்திய அணி அசத்தல்! தங்க மங்கைகளுக்கு தலா ரூ.2 லட்சம் பரிசு.

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதி ஆட்டத்தில் தென்கொரிய அணியை பந்தாடி இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இந்திய அணி வீராங்கனைகளுக்கு தலா ரூ.2 லட்சம் பரிசுத்தொகை அறிவித்து…

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதி ஆட்டத்தில் தென்கொரிய அணியை பந்தாடி இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இந்திய அணி வீராங்கனைகளுக்கு தலா ரூ.2 லட்சம் பரிசுத்தொகை அறிவித்து சிறப்பித்துள்ளது ஹாக்கி இந்தியா.

ஜப்பானின் ககாமிகஹாரா நகரில் நடைபெற்று வரும் மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் இந்திய அணியின் வீராங்கனைகள் துடிப்புடன் செயல்பட்டனர். 47-வது நிமிடத்தில் சுனேலிதா டாப்போ பீல்டு கோல் அடித்து அசத்தினார். இதன் காரணமாக இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, தென் கொரியாவுடன் பலப்பரீட்சை நடத்தியது.

இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வீரங்களைகள் அன்னு மற்றும் நீலம் தலா ஒரு கோல்களை அடித்தனர். தென்கொரியா தரப்பில் ஒரு கோல் அடிக்கப்பட்ட நிலையில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் ஜூனியர் அணி வரலாற்று வெற்றி பெற்றது. மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பையை இந்தியா வெல்வது இதுவே முதன்முறை. இந்த சாதனையை படைத்துள்ள இளம் தங்க மங்கைகளுக்கு தலா ரூ.2 லட்சம் பரிசு அறிவித்து ஹாக்கி இந்தியா சிறப்பித்துள்ளது.

ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிய போதே இந்திய மகளிர் ஜூனியர் ஹாக்கி அணி, நவம்பர் மாதம் சிலியில் நடைபெறவுள்ள ஜூனியர் உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.