மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டின் தாக்கம் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் மதுரையில் எழுச்சி மாநாடு நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சுமார் 15 லட்சம் அதிமுக தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள், நிர்வாகிகள் பேருந்து, கார் உள்ளிட்டவற்றில் மதுரைக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
சென்னை ராயபுரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பேருந்துகள் மூலம் இன்று காலை மதுரைக்கு பயணத்தை தொடங்கினர். இந்த பயணத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அதிமுகவினர் குடும்பம் குடும்பமாக மதுரை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ளனர். இதுபோன்ற மாநாட்டை கடந்த காலத்திலும் யாரும் நடத்தியதில்லை. எதிர்காலத்திலும் யாரும் நடத்தப்போவதில்லை என்ற வகையில் இருக்கும். ஜெயலலிதா மறைவுக்கு பின் கட்சி உடைந்த நிலையில் மாநாடு நடைபெறுகிறது.
கட்சியே இல்லை என்று கூறியவர்களுக்கு இந்த மாநாடு பேரிடியாக அமையும். கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்த திமுக, தற்போது அதுகுறித்து பேசுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. திமுகவிற்கு ஜால்ரா அடிப்பது ஒத்து ஊதுவது எல்லாம் ஒபிஎஸ் செயல். மாநாட்டின் தாக்கம் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.







