முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக பொதுக்குழுவுக்கு பின்னால் இருக்கும் வரலாறு

அதிமுக பொதுக்குழு என்றாலே எப்போதும் சலசலப்புகளுக்கு பஞ்சம் இல்லை. இதற்கு முன் அதிமுக பொதுக்குழுவில் ஏற்பட்ட சலசலப்புகள் என்ன?…விரிவாக பார்க்கலாம்…

 

அண்ணா, நெடுஞ்செழியனிடம் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ஒப்படைத்தது போல், எம்ஜிஆரும் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை வெவ்வேறு கால கட்டங்களில், மூத்த தலைவர்களான நாவலர் நெடுஞ்செழியன், ப.உ.சண்முகம் மற்றும் ராகவானந்தத்திடம் ஒப்படைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

எம்ஜிஆரின் மறைவுக்கு பின் ஜானகி ராமச்சந்திரன் தமிழ்நாட்டின் முதலமைச்சாரானார். ஜெ அணி மற்றும் ஜானகி அணி என அதிமுக இரண்டாக பிளவுபட்டது. ஜானகி ராமச்சந்திரன் அரசு கவிழ்ந்தது. தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. கட்சி தங்களுக்கே சொந்தம் என இரு தரப்பினரும் கொண்டாடியதால் இரட்டை இலை முடக்கப்பட்டது. அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. 1989ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஜெ அணியில் 27 பேர் எம்எல்ஏக்களாகினர். இதையடுத்து ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதாவை அதிமுகவின் தலைமையை ஏற்கும்படி கேட்டுக் கொண்டார். பிறகு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

 

1996ம் ஆண்டு பொதுத் தேர்தலில், அதிமுக படுதோல்வி அடைந்தது. இதை காரணம் கட்டி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.திருநாவுக்கரசு, கண்ணப்பன்,முத்துசாமி,அரங்கநாயகம் உள்ளிட்ட சில நிர்வாகிகள் போட்டி பொதுக்குழு நடத்தினர். பொதுச்செயலாளர் பதவியில் இருந்து, ஜெயலலிதாவை நீக்குவதாக அறிவித்தனர். தேர்தல் ஆணையம் வரை சென்றனர். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஜெயலலிதா பக்கமே நின்றதால் இரட்டை இலை முடக்கப்படவில்லை.

 

2016ம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவையடுத்து ஓ.பன்னீர் செல்வம் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றார். அப்போது நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக்கொள்ளும்படி கட்சியினர் கேட்டுக்கொண்டதால் பொதுச்செயலாளராக பொறுப்பெற்றார் சசிகலா.

 

பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் 2017ம் ஆண்டு முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்தினார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஓ.பி.எஸ் தனி அணியாக பிரிந்ததால் இரண்டாவது முறையாக இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.

அணிகளிடையே இணக்கம் உருவானதால், மீண்டும் அதிமுகவில் இணைந்தார் ஓபிஎஸ். இதையடுத்து 2017ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவையும்,துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தினகரனையும் நீக்கினர். ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்-சும்,இணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எஸ்-சும் தேர்வு செய்யப்பட்டனர்.

 

2021ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற பொதுக்குழுவில், சட்டபேரவை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தேர்வான இ.பி.எஸ், தேர்தலுக்கு பின் அதிமுக சட்டமன்ற குழுத்தலைவர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவராகவும் தன்னை நிலை நிறுத்தி கொண்டார். கட்சியை தன்னுடைய முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக, ஜூன் 23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவை பயன்படுத்தி கொள்ள நினைத்தார் எடப்பாடி பழனிசாமி.

 

ஆனால், இதை ஏற்காத ஓ.பி.எஸ் நீதிமன்றம் சென்றார். பொதுக்குழு நடத்தலாம் என்றும், புதிய தீர்மானங்கள் கூடாது என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்த நிலையில், மேல்முறையீட்டில் கட்சியின் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என தீர்ப்பு வந்தது. இது இ.பி.எஸ் அணிக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது.

 

இதையடுத்து, ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் அதே நேரத்தில், அதிமுக அலுவலகத்திற்குள் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுடன் புகுந்ததால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால், ஏற்பட்ட வன்முறை காரணமாக 34 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

 

இனி என்னவாகும் அதிமுகவின் எதிர்காலம், ஓ.பி.எஸ் என்ன செய்வார்?, மீண்டும் போட்டி அதிமுகவா ? இரட்டை இலை யாருக்கு ? என்பன போன்ற பல கேள்விகளுக்கு வரும் நாட்களில் விடை கிடைக்கும்.

ரா.தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிவாஜி…மேஜர் சுந்தர்ராஜன்..நெருங்கிய நண்பர்கள் பிரிந்ததன் பின்னணியில் நடந்தது என்ன?…

Lakshmanan

பருவமழை பேரிடர் போல் மாறியதற்கு நாம்தான் காரணம்: கமல்ஹாசன் 

EZHILARASAN D

இந்தியாவில் கொரோனா 4ம் அலை தொடங்கியதா?

EZHILARASAN D