மாற்றுத்திறனாளிகளை புறக்கணித்த ஹெச்பி நிறுவனத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் பொதுமக்கள் பெட்ரோல் நிரப்ப வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்போவதாகவும், தங்களுக்கு பணி வழங்காதபட்சத்தில் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த இருப்பதாக மாற்றுத்திறனாளிகள் கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும்…

இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் பொதுமக்கள் பெட்ரோல் நிரப்ப வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்போவதாகவும், தங்களுக்கு பணி வழங்காதபட்சத்தில் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த இருப்பதாக மாற்றுத்திறனாளிகள் கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் இரு சக்கர வாகனங்கள்
மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு காற்று நிரப்புவது மற்றும் இருசக்கர
வாகனங்களுக்கு ஆயில் மாற்றுவது போன்ற சிறிய வேலைகளை மாற்றுத்திறனாளிகள் செய்து வந்தனர்.

இந்த நிலையில் எச் பி பெட்ரோலிய நிலையங்களில் மாற்று திறனாளிகளுக்கு வேலை
வழங்கப்படமாட்டாது என அறிவித்து அந்த நிறுவனம் பணியில் இருந்த மாற்றுத்திறனாளிகளை பணியில் இருந்து விடுவித்தனர்.

இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் நடவடிக்கையை கண்டித்து சிதம்பர நகரில்
தூத்துக்குடி மாவட்ட சிறப்பு மாற்று திறனாளிகள் பாரா விளையாட்டு கூட்டமைப்பினர்
மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்களுடன் இணைந்து தாரை தப்பட்டை அடித்து கண்டன
ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது தங்களுக்கு மீண்டும் இந்துஸ்தான்
பெட்ரோலியம் நிறுவனம் இந்த பணிகளை வழங்க வேண்டும் வழங்காதபட்சத்தில்
இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் பொதுமக்கள் யாரும் பெட்ரோல் நிரப்ப
வேண்டாம் என தூத்துக்குடி இளைஞர்களுடன் சேர்ந்து விழிப்புணர்வு
ஏற்படுத்தப்படும் என மாற்றுத்திறனாளிகள் கூறினர்.

உடனடியாக தமிழ்நாடு முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு மாற்றுத்திறனாளிகளின்
வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். தாங்கள் நம்பியுள்ள இந்த சிறிய
வருமானத்தையும் இழந்துவிட்டால் மிகவும் பின்னடைவை சந்திக்க நேரிடும் என
கேட்டுக் கொண்ட அவர்கள் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் செயல்பாட்டை
கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சமூக
ஆர்வலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ரெ. வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.