அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல்காந்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு வரை வழக்கு கடந்து வந்த பாதையை பற்றி விரிவாக காணலாம்.
ராகுல் காந்தி வழக்கு கடந்து வந்த பாதை:
- மார்ச் 23, 2023: மோடி என்ற பெயர் குறித்து ராகுல் காந்தி சர்சைக்குரிய கருத்துகளை கூறியதாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் மாவட்ட நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இதனால் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
- இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் மார்ச் 24-ம் தேதி, ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார்.
- இந்த இரண்டு ஆண்டு தண்டனைக்கு தடை கோரி ராகுல் காந்தி சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகினார். செஷன்ஸ் நீதிமன்றம் ஏப்ரல் 20 அன்று ராகுல் காந்தியின் மனுவை நிராகரித்தது. மேலும் நாட்டின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியின் எம்.பி. மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
- தொடர்ந்து ஏப்ரல் 25-ம் தேதி, சூரத் செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
- கடந்த மே மாதம் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. அப்போது தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிபதி ஹேமந்த் பிரசாக் கோடை விடுமுறைக்குப் பின் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.
- சூரத்தில் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட வழக்கைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மீது மேலும் பல அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.
- ஜூலை 4 அன்று வழக்கறிஞர் பிரதீப் மோடி தாக்கல் செய்த மற்றொரு அவதூறு வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி அடுத்த விசாரணை வரை ராகுல் காந்திக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது.
- இதனை தொடர்ந்து இன்று, மோடி குடும்பப்பெயர் வழக்கில் ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்து குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியாக இருப்பதாகவும், அந்த தீர்ப்பில் உயர் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனவும், நீதிபதி தெரிவித்தார்.









