”ஆளுநர் முழு அரசியல்வாதியாக மாறியிருக்கிறார்” – அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி

ஆளுநர் ஆர்.என்.ரவி முழு அரசியல்வாதியாக மாறியிருக்கிறார் என நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.  நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு படித்த படிப்பிற்கு…

ஆளுநர் ஆர்.என்.ரவி முழு அரசியல்வாதியாக மாறியிருக்கிறார் என நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். 

நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. குறிப்பாக வேலைவாய்ப்பு திறன் கொண்ட பொறியியல் பட்டதாரிகள் கிடைப்பதில்லை என்று தொழில்துறையினர் கூறுவதாக தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி பொறியியல் பட்டதாரிகளை விட பாலிடெக்னிக் மாணவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கிறது. கல்லூரிகளில் பாடம் நடத்தும் முதுகலை பட்டதாரிகள், தினக்கூலி போல மாதத்திற்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை மட்டுமே சம்பளம் பெறுகின்றனர் என்றும் அவர் கூறியிருந்தார்.

மேலும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பன்முக திறன் கொண்ட கல்வியை வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும், அதன் முக்கிய அம்சங்கள் உள்ளடக்கியது தான் தேசிய கல்வி கொள்கை என்றும் குறிப்பிட்டிருந்த அவர் தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு உண்டான சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதோடு தமிழ்நாட்டுக்கு இணையான முதலீடுகளை ஹரியானா மாநிலம் ஈர்த்து வருகிறது என்றும் அவர் பேசியிருந்தார்.

அதிலும் முதலீட்டாளர்களை சந்தித்து கேட்பதாலோ அல்லது பேசுவதால் மட்டுமே முதலீடுகள் வந்துவிடாது என கூறிய அவர், உலகலாவிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு பொருத்தமான சூழலை உருவாக்க வேண்டும். அதற்கு திறமையான திறன்மிக்க மனித வளத்தை உருவாக்குவதே சிறந்த வழி என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, துணைவேந்தர்களை அழைத்து ஆளுநர் அரசியல் பேசியிருப்பதாக குற்றம்சாட்டினார். சிதம்பரத்தில் நிகழ்ந்த குழந்தை திருமண விவகாரத்தை திசை திருப்பும் வகையில் ஆளுநர் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முதலமைச்சரின் பயணத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டி அரசியலுக்காக துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் பயன்படுத்தியிருப்பதாகவும் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் மத்திய அரசின் தரவரிசையில் 100 பல்கலைக்கழகங்களில் 22 பல்கலைகள் தமிழ்நாட்டில் உள்ளன எனவும், தரவுகளின் அடிப்படையில் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டில், வேந்தரான ஒருவர் உண்மைகளை மறைத்துவிட்டு எப்படி பேசுகிறார்? எனவும் வினவினார்.

தமிழ்நாட்டில் ஜனவரி 2022 லிருந்து ஏப்ரல் 2023 வரை 108 நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. 2021-2022 இல் 4,29,613 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன உள்ளிட்ட தகவல்களை குறிப்பிட்டு பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு வெளிநாட்டு அரசுமுறை பயணங்களை ஆளுநர் கொச்சைப்படுத்தி பேசுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என தெரிவித்தார்.

பிரதமர் மோடி முதலமைச்சராக இருந்த போது சீனா, சிங்கப்பூர், கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க சென்றதாகவும், தற்போதைய ஆளுநரின் விமர்சனம் பிரதமர் மோடியை விமர்சிப்பதாகவே தனக்கு தோன்றுவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கே வெளிநாடுகளுக்கு பயணம் செல்வதாக கூறியதோடு, அரசியலுக்கு ஆளுநர் மாளிகையை பயன்படுத்தக்கூடாது எனவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.