ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தென்கிழக்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி ஆதித்ய குமார் சவுத்ரி நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களை இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்கமாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த கோர விபத்தில் 301 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 900பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இரண்டு ரயில் பாதைகளில் சீரமைப்பு பணி நிறைவடைந்ததால், இரு வழித் தடத்திலும் ரயில்கள் இயக்கப்பட்டன. விபத்து நிகழ்ந்த 51 மணி நேரத்தில் ரயில் போக்குவரத்து சீரடைந்ததாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். உயிரிழந்தவர்களுக்கு மத்திய அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. மேலும் ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் நிவாரணங்கள் அறிவித்துள்ளன.
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டாக் ரயில்வே காவல்துறையின் உதவி ஆய்வாளர் பப்பு குமார் நாயக் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 337, 338, 304 A, 34 மற்றும் ரயில்வே சட்டம் 153, 154, 175 ஆகிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் அடையாளம் காணப்படாமல் 101 உடல்கள் உள்ளதாக தகவல் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தென்கிழக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஆதித்ய குமார் சவுத்ரி நியூஸ் 7 தமிழ் துணை ஆசிரியர் அன்சர் அலிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளதாவது..
” விபத்துக்கு பிறகு 37 ரயில்கள் சென்னை நோக்கி இயக்கப்பட்டுள்ளன. சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது உரிய ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். ரயில்நிலைய மேலாளர் உட்பட அனைவரும் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்.
மத்திய ரயில்வே பாதுகாப்பு படையினரும் விசாரனை நடத்தி வருகின்றனர் அவர்கள் விசாரணை செய்து சிபிஐ க்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள்” என ஆதித்ய குமார் சவுத்ரி தெரிவித்துள்ளார்.







