ஜூலை 1 முதல் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்.. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு!

கர்நாடக அரசு, இலவச மின்சார திட்டத்திற்கான அரசாணையை இன்று பிறப்பித்துள்ளது. இதில் விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகள் வாடகை வீடுகளில் வசிப்போருக்கும் பொருந்தும் என முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த…

கர்நாடக அரசு, இலவச மின்சார திட்டத்திற்கான அரசாணையை இன்று பிறப்பித்துள்ளது. இதில் விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகள் வாடகை வீடுகளில் வசிப்போருக்கும் பொருந்தும் என முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து சித்தராமைய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த மாதம் 20ம் தேதி பதவியேற்ற நிலையில், கர்நாடகா மாநில சட்டப் பேரவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து இருந்தது தொடர்பாக முடிவு எடுப்பதற்காக, கடந்த 2ஆம் தேதி முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் முக்கியமாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்குவது, பட்டதாரிகளுக்கு மாத உதவித்தொகை வழங்குவது, பெண்களுக்கு இலவச பஸ் பயணம், இலவச மின்சாரம் போன்ற திட்டங்களை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதோடு, கூட்டத்தின் முடிவில் தேர்தலில் அறிவித்த 5 வாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதில் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் மாதம் தலா 200 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படும் என்ற திட்டமானது வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக கர்நாடக அரசு இன்று தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக , சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, ஒரு வீடு சராசரியாக ஒரு மாதத்திற்கு சுமார் 100 யூனிட் பயன்படுத்தினால், அது 110 யூனிட் இலவச மின்சாரத்திற்கு தகுதியுடையது. இதில் அரசு கூடுதலாக வழங்கும் 10 சதவீதமும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஒரு நுகர்வோர் சராசரியாக ஒரு மாதத்திற்கு சுமார் 150 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தினால், அவர் 165 யூனிட் மின்சாரம் வரை இலவச மின்சாரத்தைப் பெறலாம். இருந்தும் மாதாந்திர யூனிட் சராசரியாக 200 யூனிட்டுகளுக்கு மேல் சென்றால், அந்த வீடுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் வராது. அவர்கள் முழு பில் தொகையையும் செலுத்த வேண்டும். அதேபோல், இந்தத் திட்டம் வீடுகளில் உள்ள இணைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும், வணிக பயன்பாட்டிற்கு பொருந்தாது எனவும் , ஒரு வீட்டில் இரண்டு அல்லது மூன்று மீட்டர்கள் (ஆர்ஆர் எண்) இருந்தால், ஒன்று மட்டுமே திட்டத்திற்கு பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் வாடகை வீட்டாருக்கு பொருந்துமா என முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பியபோது, இதற்கு பதிலளித்த சித்தராமையா, ‘கர்நாடகாவில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் உட்பட அனைத்து வீட்டு நுகர்வோருக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.