கடன் செயலி உயிரிழப்புகள் பெருக அரசு அனுமதிக்கக்கூடாது

ஆன்லைன் சூதாட்ட உயிரிழப்புகளைப் போலவே, கடன் செயலி உயிரிழப்புகளும் பெருக அரசும், காவல்துறையும் அனுமதிக்கக்கூடாது என மத்திய மாநில அரசுகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். ஆன்லைன் கடன் செயலி மூலம் பணம் பெற்று…

ஆன்லைன் சூதாட்ட உயிரிழப்புகளைப் போலவே, கடன் செயலி உயிரிழப்புகளும் பெருக அரசும், காவல்துறையும் அனுமதிக்கக்கூடாது என மத்திய மாநில அரசுகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

ஆன்லைன் கடன் செயலி மூலம் பணம் பெற்று திருப்பி செலுத்த முடியாத இளைஞரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதால் மனமுடைந்த இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை சூளைமேடு சேர்ந்த பாண்டியன் என்கிற இளைஞர் ஆன்லைன் செயலி மூலம் பணம் பெற்ற இளைஞர் அதனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஆதார் அட்டையில் இருந்து அவரது புகைப்படத்தை எடுத்து அதை ஆபாசமாக சித்தரித்து அவரது உறவினர்கள் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியதால் மனமுடைந்து வீட்டிலேயே தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என காவல் துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆன்லைன் கடன் செயலி மூலம் வாங்கிய ரூ.5000 கடனை செலுத்த தாமதம் ஆனதற்காக, அதன் நிர்வாகம் அருவருக்கத்தக்க வகையில் அவமதித்ததால் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பாண்டியன் என்ற பட்டதாரி இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்டது மிகுந்த வேதனையளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டங்களைப் போலவே கடன் செயலிகளும் உயிரிழப்புக் கருவிகளாக மாறி வருகின்றன. அவற்றை இயக்குவது யார் என்பதே தெரியாது. சில ஆயிரக்கணக்கில் கடன் வழங்கும் கடன் செயலிகள், அந்தப் பணத்திற்கு பல்லாயிரக்கணக்கில் கொடூரமாக வட்டி வசூலிக்கின்றன.

குறித்த காலத்தில் கடனை திரும்ப செலுத்தாவிட்டால், கடன் பெற்றவரையும், அவரது குடும்பத்து பெண்களின் படங்களையும் ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ் -அப் மூலம் செயலிகள் பரப்புகின்றன. இதனால் அவமானம் அடையும் கடன்தாரர்கள் உயிரை மாய்த்துக் கொள்வது தொடர்கதையாகிறது.

கடன் செயலிகள் மூலம் கடன் வாங்க வேண்டாம் என ரிசர்வ் வங்கியும் எச்சரிக்கிறது; காவல்துறையும் எச்சரிக்கிறது. ஆனால், அவற்றை தடை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கின்றன. அதன் விளைவாக ஆன்லைன் கடன் செயலிகள் புற்றீசல் போல பெருகி விட்டன.

ஆன்லைன் சூதாட்ட உயிரிழப்புகளைப் போலவே, கடன் செயலி உயிரிழப்புகளும் பெருக அரசும், காவல்துறையும் அனுமதிக்கக்கூடாது. எனவே, ஆன்லைன் கடன் செயலிகளை முற்றிலுமாக தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.