மீனவர் வலையில் சிக்கிய 100 கிலோ எடையுள்ள ராக்கெட் உதிரிபாகம்!

காசிமேடு மீனவர் ஒருவரின் மீன் வலையில் 100 கிலோ எடையுள்ள ராக்கெட்டின் உதிரிப்பாகம் சிக்கியது. சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் கடந்த டிச. 21-ஆம் தேதி தனது விசைப்படகில், ஓட்டுநர் லோகநாதன்…

காசிமேடு மீனவர் ஒருவரின் மீன் வலையில் 100 கிலோ எடையுள்ள ராக்கெட்டின் உதிரிப்பாகம் சிக்கியது.

சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் கடந்த டிச. 21-ஆம் தேதி தனது விசைப்படகில், ஓட்டுநர் லோகநாதன் மற்றும் ஆறு மீனவர்களுடன் மீன் பிடிப்பதற்காக ஆழ்கடலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை ஆந்திர மாநிலம் நிஜாம் பட்டினம் அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். பின்னர் மீன்வலையை இழுத்து பார்த்தபோது, அதில் அலுமினியத்தால் ஆன ஐந்து அடி நீளம், ஒன்றரை அடி அகலம், சுமார் 100 கிலோ எடை கொண்ட ராக்கெட் உதிரி ஒன்று சிக்கியுள்ளது.

அதனை படகில் வைத்து கொண்டுவந்த மீனவர்கள், இன்று சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக உதவி இயக்குனரிடம் ஒப்படைத்தனர். இதனை ஆய்வு செய்த மீன்வளத்துறை அதிகாரிகள், “இது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் உதிரி பாகம். இது கடலில் விழுந்து தற்போது மீனவர்கள் வலையில் சிக்கி உள்ளது. இதனால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை” என தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.