பள்ளி, கல்லூரிகளில் ஆவணங்களில் பெயர் எழுதும்போது முன் எழுத்தை தமிழில் எழுத வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழில் பெயர் எழுதும்போது, இனிஷியலை (பெயரின் முதலெழுத்தை) தமிழிலேயே குறிப்பிட வேண்டும் எனவும், பொதுமக்களும் பொதுப் பயன்பாடுகளில் இனிஷியலை தமிழில் எழுத ஊக்குவிக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கோரிக்கை விண்ணப்பங்களில் பெயரின் முன்னெழுத்தும், கையெப்பமும் தமிழில் இட பொதுமக்களுக்கு அரசு சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, பெயரின் முன்னெழுத்தும், கையெப்பமும் தமிழில் இட மாணவ மாணவியர்களுக்கும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுள்ள ‘லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றம்’, ‘புகைபிடிப்பது சட்டப்படி குற்றம்’ என்பது போன்ற விளம்பர சுவர் ஒட்டிகளை போன்றே, பெயரின் முன்னெழுத்தும், கையெப்பமும் தமிழில் இட வேண்டும் என்ற விளம்பர சுவர் ஒட்டிகளை ஒட்டி, நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.
முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை, அனைத்து அரசு அலுவலர்கள் / பணியாளர்கள் என அனைவரும் தமிழில் கையெப்பம் இட மீண்டும் வலியுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.









