கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே வேறு சாதி பெண்ணை காதல் திருமணம் செய்த மகனை, தந்தை வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி (வயது 47) என்பவர் தனது மனைவி மற்றும் மகன் சுபாஷுடன் திருப்பூரில் தங்கி, அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த அனுசுயா என்ற பெண்ணுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு சுபாஷின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டு புது வாழ்க்கை தொடங்கினர்.
பின்னர் தனியாக வாழ்ந்த வந்த இருவரும் நேற்று சுபாஷின் சொந்த ஊரான அருணபதி கிராமத்திற்கு வந்துள்ளார். அங்குத் தனது பாட்டியும், தண்டபாணியின் தாயாருமான கண்ணம்மாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். பாட்டி கண்ணம்மாவின் வீட்டிற்கு சுபாஷ் சென்றதை அறிந்த தண்டபாணி, ஆத்திரத்துடன் அரிவாளை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.
இதையடுத்து இரவு வழக்கம்போல் தூங்கி கொண்டிருந்த தனது மகன் சுபாஷ், மருமகள் அனுஷா மற்றும் தனது தாயை சுபாஷின் தந்தை தண்டபாணி கொடூரமாகக் கத்தியால் வெட்டி உள்ளார். இதனால் 3 பேரும் வலியால் பயங்கரமாக அலறினர்.
இதில் படுகாயம் அடைந்த பாட்டி கண்ணம்மாவும் பேரன் சுபாஷ்ஷும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். அனுஷா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை குற்றவியல் நடுவர் நீதிபதி அமர் ஆனந்த் உயிருக்குப் போராடும் நிலையில் உள்ள அனுசுயாவிடம் மரண வாக்குமூலத்தைப் பெற்றனர். சம்பவ இடத்தில் ஊத்தங்கரை டிஎஸ்பி அமல எட்வின் தலைமையில் காவல்துறை குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஆணவக் கொலை செய்த தண்டபாணியை விரைவில் பிடிக்கத் தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். தலைமறைவாக உள்ள தண்டபாணியைத் தனிப்படை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







