முக்கியச் செய்திகள் உலகம் கட்டுரைகள்

விண்வெளியில் மனிதன் பயணித்த மகத்தான 60வது ஆண்டு!


ஹேலி கார்த்திக்

கட்டுரையாளர்

மனிதனுக்கும் விண்வெளிக்குமான தொடர்பு என்பது நிலாவை காட்டி சோறு ஊட்டிய காலத்திலேயே தொடங்கிவிட்டிருந்தது. ஆதி மனிதன் குகைகளில் தன்னையும், விலங்குகளையும் சேர்த்து அதனுடன் நட்சத்திரங்களையும் வரைந்து வைத்திருந்தான். இப்படியாக தொடங்கிய விண்வெளி குறித்த மனிதனின் கற்பனை குதிரை மெள்ள வளர்ந்த தொழில்நுட்பங்களுடன் றெக்கை கட்டி பறக்கத் தொடங்கியது.

சர்வதேச அளிவில் விண்வெளி மீதான ஆர்வம் 1940களில் பற்றி எரியத் தொடங்கியது. குறிப்பாக அப்போதிருந்த சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையே போட்டா போட்டியே நிலவியது. இது வெறுமென விண்வெளிக்கு மனிதனையோ இதர தொழில்நுட்ப கருவிகளையோ அனுப்பி வைப்பது மட்டுமல்ல. மாறாக விண்வெளியை காலணி படுத்துவதற்கான அதிகார போட்டியாக இது இருந்தது.

அமெரிக்கா இந்த போட்டியில் ஒரு கூட்டணியை உருவாக்கியது. இதற்காக அமெரிக்க உளவுத்துறை ‘பேப்பர் கிளிப்’ எனும் ரகசிய திட்டத்தை செயல்படுத்தியது. இதன் மூலம், இரண்டாம் உலகப்போர் நடந்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் அமெரிக்கா, ஜெர்மனியின் நாஜி படை மீது தாக்கதல் நடத்தி அந்நாட்டிலிருந்த முக்கிய அறிவியலாளர்களை தன்வசமாக்கிக்கொண்டது. இதில் ராக்கெட் கண்டுபிடிப்பின் தந்தை என அறியப்படுகிற ‘வெர்னர் வான் பிரவுன்’ என்கிற ஜெர்மன் விஞ்ஞானியும் அடங்குவார். இவர்களைக் கொண்டு அமெரிக்கா v2 வகை ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தியது. இதன் மூலம் 1944ல் உலகின் முதல் ராக்கெட் விண்ணையடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து 1957ல் ஸ்புட்னிக் 1 விண்கலன் மூலம் உலகின் முதன் முதலாக விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்பிய முதல் நாடாக சோவியத் யூனியன் பெயர் பெற்றது. இது அமெரிக்காவுக்கு சவாலை ஏற்படுத்தியது. இந்நிலையில் அப்போதைய அமெரிக்க அதிபர் டுவைட் டேவிட் ஐசனாவர் விண்வெளி 9துறையில் அமெரிக்காவை முன்னிறுத்த அதிரடி முடிவுகளை அறிவித்து அதற்கான ஆராய்ச்சிகளையும் தொடங்கினார். இதன் பலனாக முதன் முதலில் 1958ல் எக்ஸ்புலோர் எனும் செயற்கைக்கோளை அமெரிக்கா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

ஆனால், இத்துடன் இந்த விண்வெளி போட்டா போட்டி முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா ‘ப்ரோஜெக்ட் மெர்குரி’ எனும் புதிய திட்டத்தை 2.25 பில்லியன் டாலரில் தொடங்கியது. இதன் மூலம் விண்வெளியில் மனிதனை கொண்டு சேர்ப்பது. அங்கிருந்து திரும்பவும் பத்திரமாக தரையிறக்குவது என்பது மட்டுமே இந்த திட்டத்தின் ஒரே நோக்கமாகும்.

ஆனால், 1961 ல் உலகின் மகத்தான அதிசயம் ஒன்றை சோவியத் யூனியன் அரசு நிகழ்த்திக்காட்டியது. ‘யூரி ககாரின்’ எனும் விண்வெளி வீரரை சோவியத் விண்வெளிக்கு அனுப்பி பத்திரமாக தரையிறக்கியது.

இது அவ்வளவு எளிதாக நிகழ்ந்துவிடவில்லை. காகாரின் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்ட வோஸ்டாக் வகை ராக்கெட் பெரிதும் நம்பிக்கைக்குரியதாக இருக்கவில்லை. ஏனெனில் இந்த ராக்கெட் பரிசோதனையில் 5ல் 4 மட்டுமே வெற்றிப்பெற்றன. ஆனால், அன்றைய காலக்கட்டத்தில் இதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை. ‘வோஸ்டாக்’ வகை ராக்கெட் 1960ல் பரிசோதனை செய்யப்பட்டது. இது தோல்வியை எதிர்கொண்டது. ஆனாலும், அடுத்த ஆண்டிலே ககாரின் இந்த ராக்கெட்டில் விண்ணுக்கு பறந்தார்.

இதில் இயந்திரக் கோளாறு ஏற்படுமாயின் தப்பிப்பதற்குக்கூட அவசர வழி கிடையாது. ஆனால், உலகில் சோவியத் யூனியனின் ஆளுமையை நிலைநாட்டவும், அமெரிக்காவிற்கு எதிரான போட்டிக்காகவும் காகரின் தனது உயிரை பணயம் வைத்தார்.

1961 ஏப்ரல் 12, ககாரின் காலை 7:10ல் ராக்கெட்டிற்கு வந்து சேர்ந்தார். 9:07க்கு ராக்கெட் புறப்பட தயாரானது. 9:12க்கு ராக்கெட் புறப்பட்டது. 9:17க்கு ராக்கெட் விண்வெளி ஆர்பிட்டை எட்டியது. சுமார் 203 மைல் உயரத்தில் புவியை ஒரு முறை சுற்றி வந்தார். அப்போது அவர் கூறிய வார்த்தைகள் மனித சமூகத்திற்கு முன்னெப்போதும் இல்லாத வினையூக்கியாக அமைந்தது. “உலகத்தின் மிக உயரத்தில் நான் அமர்ந்திருக்கிறேன். இங்கிருந்து பூமி நீல நிறமாக அழகாக காட்சியளிக்கிறது” என்பதுதான் அந்த வார்த்தைகள்.

இது விண்வெளி ஆய்வில் மனித இனத்தை மேலும் முன்னோக்கி செலுத்த மட்டும் ஊக்குவிக்கவில்லை, மாறாக ஒரு சாதாரன விவசாய குடும்பத்தில் பிறந்து உலகின் முதல் விண்வெளி வீரரான ககாரியின் இந்த வார்த்தைகள் சாமானிய மக்களின் மனதிலும் விண்வெளி குறித்த ஆவலை, கற்பனையை, கனவு புத்தகத்தை திறந்தது.

நாம் வாழும் இந்த நீல நிற பந்தை மிக உயரத்திலிருந்து பார்த்து இன்றோடு 60 ஆண்டுகள் ஆகின்றன.

பிரபல அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் வார்த்தைகளில் சொல்வதென்றால், “மனிதன் விண்வெளிக்கு ஆயிரம் கருவிகளையும், ரோபோக்களையும் அனுப்பலாம். அது மனிதனை காட்டிலும் அதிக அளவு உழைக்கலாம். ஆய்வுகளை மேற்கொள்ளலாம். ஆனால், மனிதன் ஒருவன் விண்வெளிக்கு சென்று, அதன் மூலம் உலக மக்கள் பெறும் அறிவியல் உந்துதலுக்கு இணையாக, ரோபோக்களின் பங்களிப்பு ஒருபோதும் இருக்காது.” என்றுதான் நாம் ககாரியின் சாதனையை பார்க்க வேண்டும்.

Advertisement:

Related posts

நாளை விடுதலையாகிறார் சசிகலா!

Niruban Chakkaaravarthi

தமிழகத்தில் உருமாறிய கொரோனா இல்லை: ஜெ.ராதாகிருஷ்ணன்

எல்.ரேணுகாதேவி

பிரபல நடிகருக்கு ’ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சை!

Karthick