சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை மற்றும் கரூர் இல்லங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் கரூரில் உள்ள அவரது இல்லங்களில் மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
முந்தைய அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமலாக்கத்துறை சோதனை குறித்த தகவல் கிடைத்ததும் நடைபயிற்சி சென்றிருந்த செந்தில் பாலாஜி அவசரமாக வீடு திரும்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமலாக்கத்துறை சோதனை முடிந்த பிறகு முழு விவரம் தெரியவரும் என தெரிவித்தார். மேலும் அமலாக்கத்துறையோ, வருமான வரித்துறையோ யாராக இருந்தாலும் அதிகாரிகளின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். அலுவலக உதவியாளர் விஜயகுமாரை அழைத்துக் கொண்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்கள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் உள்ளதா என்பதை கண்டறிய அதிகாரிகள் இந்த சோதனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனையின் போது அமைச்சர் அலுவலகத்திற்கு இந்தியன் வங்கி அதிகாரிகளையும் அழைத்து சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பி.ஜேம்ஸ் லிசா







