பணியிட மாறுதல் வழங்கக் கோரி அமைச்சர் சிவசங்கர் காலடியில் கைக்குழந்தை வைத்து அரசுப் பேருந்து ஓட்டுநா் கோரிக்கை வைத்ததற்கு, உடனடியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் மற்றும் அமைச்சருக்கு ஓட்டுனர் கண்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சார்பில் சுங்கம் பகுதியில் உள்ள போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து கழகத்தில், பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வாரிசு பணி வழங்குதல், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் கோவை மாவட்ட பணிமனை அளவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற பணியாளர்களின் குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர்
சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கோவை மண்டலத்தில் ஓட்டுநராக பணியாற்றி வரும் கண்ணனின் சொந்த ஊர் தேனி. இவருக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தையும், ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனா். இவரது மனைவி டெங்கு காய்ச்சல் காரணமாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தாா்.
இவரது இரண்டு பெண் குழந்தைகளையும், கண்ணனின் பெற்றோா் பராமரித்து வருகின்றனா். அவா்களும் வயதானவர்கள் என்பதால் குழந்தைகளைப் பாா்த்துக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து கோவையில் பணியாற்றும் தன்னை தேனிக்கு பணியிடம் மாற்றம் செய்யுமாறு பொது மேலாளரிடம் பலமுறை கண்ணன் கோரிக்கை விடுத்தும் பயனில்லை.
எனவே கோவையில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது 6 மாத குழந்தையை, அமைச்சர் சிவசங்கர் காலடியில் வைத்து கோவையில் இருந்து தேனிக்கு பணி மாறுதல் வழங்கக்கோரி ஓட்டுநர் கண்ணன் கோரிக்கை வைத்தார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைதொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஓட்டுநர் கண்ணன் சொந்த ஊரான தேனிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஓட்டுனர் கண்ணன், தனது கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சிவசங்கருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.







