இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு ஜார்க்கண்ட் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து பேசினார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 10ஆம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்திய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், படம் வெளியாவதற்கு முன்பே ரஜினிகாந்த் ஒரு வாரம் ஆன்மீக சுற்றுப்பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இமயமலைக்கு செல்லாமல் இருந்த அவர், தற்போது 4 ஆண்டுகளுக்கு பின்னர் தன்னுடைய பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய உள்ளார்.
இமயமலை பயணம் முடிந்தவுடன் இன்னும் ஒரு சில தினங்களில் சென்னை திரும்ப உள்ள ரஜினி, ஜெயிலர் பட வெற்றியை படக்குழுவுடன் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இமயமலை பயணத்தின் போது செல்லும் இடமெல்லாம் ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு எடுக்கப்படும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினி, ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றுள்ளார். முதலில் ரிஷிகேஷில் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்குச் சென்ற அவர், ரிஷிகளைச் சந்தித்து உரையாடினார். பின்னர் உத்தரகண்ட்டில் வியாசர் குகைக்கு சென்று வழிபட்ட அவர், பத்ரிநாத் கோயிலுக்குச் சென்றும் வழிபட்டார்.
இந்நிலையில், தற்போது ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு சென்றுள்ளார் ரஜினிகாந்த். அங்குள்ள யோகதா சத்சங் தலைமையகம் சென்று அங்குள்ள சன்னியாசிகளை சந்தித்துள்ளார். பின்னர் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்துப் பேசினார். இதனையடுத்து இன்று உ.பி. மாநிலம் லக்னோ செல்லும் அவர், நாளை அங்கிருந்து சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.







