இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மூதாட்டியை மிதித்து கொன்ற யானை, அவரது இறுதிச்சடங்கிலும் உடலை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் மயுர்பஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் 70 வயதான மாயா முர்மு. இவர் ராய்பால் கிராமத்தில் வசித்து வந்தார். கடந்த வியாழக்கிழமையன்று தனது கிராமத்தில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, ஜாம்ஷெட்பூர் நகரிலிருந்து சுமார் 10 மைல் தொலைவில் அமைந்துள்ள டால்மா வனவிலங்கு சரயலாயத்தில் இருந்து வழிதவறி வந்த காட்டு யானையால் அந்த மூதாட்டி தாக்கப்பட்டுள்ளார்.
யானையால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தவரை பார்த்த கிராம மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிழந்ததாக ராஸ்கோவிந்த்பூர் காவல் நிலைய ஆய்வாளர் லோபமுத்ரா நாயக் கூறினார்.
பின்னர் இறுதி சடங்கு செய்வதற்காக அவரது உடல் அவரின் சொந்த கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. மாயா முர்முவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் செய்து கொண்டிருக்கும் போது மீண்டும் அந்த காட்டு யானை திடீரென அங்கு வந்த தகனமேடையில் வைக்கப்பட்டிருந்த முர்முவின் உடலை மிதித்து கொடூராமாக தாக்கிவிட்டு தப்பி ஓடியது. இதையடுத்து சில மணி நேரங்களுக்கு பின்னர் முர்முவின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதேபோல் கடந்த மே மாதம், ஆந்திரபிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் காட்டு யானையால் மிதித்து கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைய காரணம் என்ன?
விலங்குகளின் இயற்கையான வாழ்விடத்தை இழப்பதால் யானைகள் குடியிருப்புப் பகுதிகளுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், உலகம் முழுவதும் மனித மற்றும் யானைகளுடனான மோதல் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
தற்போது மாறிவரும் காலநிலை மாற்றம், யானைகளின் வாழ்க்கையையும் கடினமாக்குகிறது. வெப்பநிலை அதிகரிக்கும் போது, நீர் ஆதாரங்கள் வறண்டு போவதால், யானைகள் நீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகிறது. அவ்வாறு வரும் போது மனிதர்கள் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இந்த உலகத்தின் சமநிலையை நாம் பேணி காக்க வேண்டுமெனில் யானைகள் இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே காடுகள் அழிப்பை குறைத்து யானைகளின் வாழ்விடத்தை பாதுகாப்பானதாக மனிதர்களாகிய நாம் மாற்றியமைக்க வேண்டும்.








